சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரருக்கு அன்பில் ஓர் கடிதம்
சகலமும் அறிந்த சனீஸ்வரருக்கு....
நலம் நலமறிய ஆவல் கொண்டு
உன் நலம் விரும்பும் நானுமொருவன். சங்கடம் தீர்க்கும் உங்களுக்கு பெரும் சங்கடத்தில் எழுதுகிறேன் இந்த கடிதத்தை...
இரண்டரை ஆண்டுக்கொரு முறை
இருக்கும் வீட்டை மாற்றும் காரணமென்ன..
வசைபாடி அலைய வைக்கிறானோ
வாடகை வீட்டுக்காரான்...
இல்லை.,
வசதிக் குறைவால் மாறுகிறாயோ புதுவீட்டைத் தேடி...
எம்மை போல நீயும் வாடகைக் குடித்தனமோ..
சொர்க்கத்திலும் சொந்தவீடு உமக்கில்லையா??
விடையறிவாய் நீ மட்டுமே!!!
காகத்தில் பயணம் வருகிறாயாம் - செய்த
பாவ புண்ணியத்திற்குப் பரிசளிக்கிறாயாம்..
தந்தை சூரியன் முதல் சங்கரன் சிவன் வரை
உந்தன் பார்வையில் தப்பியது யாருமில்லையாம்.
மங்குசனி மரணச்சனி,
பொங்குசனி தங்குசனி,
ஏழரைச் சனி அஷ்டமச் சனி
எத்தனை பெயருனக்கு தெரியுமா..
இந்த பூமியிலே...
அன்றாடம் அரங்கேறும்
அத்தனையும் உன்செயலாம்..
வானியல் கணிதத்தில்
வல்லவர்கள் சொல்கிறார்கள்..
கட்டம் கட்டமாய் நீ மாறுவதாய்க்
கட்டம் கட்டிக் கதை சொல்லியே
காலத்தைத் தள்ளுகிறார்கள்...
கஷ்டத்தில் இருப்பவரின்
கண்ணீரை விலையாக்கி
சோதிடமென்று சொல்லி
சோதனை செய்கிறார்கள்....
உன்னால் பயனடைகின்ற
உத்தியோகசாலிகள்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி....
நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதியென்று
நாலுந் தெரிந்தவர் சொல்லும் போது,
நாலும் எட்டும் உமக்கேன் எதிரி???...
உன் பெயரைச் சொன்னால் போதும்..
எதிர்வீட்டுக்காரன் ஏமாந்து போகிறான்...
அடுத்த வீட்டுக்காரன் அலறி ஓடுகிறான்...
அக்கம் பக்கமெல்லாம் மிரண்டு போகிறான்...
மகராசனவன் கூட மடியேந்தி அலைவான்.
மடியேந்தி அலைபவனும் மகராசனாவானென்று
படிதோறும் பலகதைகள் உலாவுகின்றன..
குடியேறும் உன்னால் விதிமாறுமென்று.
உலகம் உரைக்கிறது உன் பெருமையை....
கொட்டியும் கொடுத்திடுவாய்....
குலத்தையும் அழித்திடுவாய்....
பிழைக்க ஓர் வழியுமின்றி
பிச்சையும் எடுக்க வைப்பாயென
பெருமை சிறுமை பேச்சுக்கள் ஏராளம்...
வீதியிலே இடமுண்டு விளையாட
விதி என்ற பெயரைச் சொல்லி
வீட்டிற்குள்ளே ஏனாடுகிறாய் சடுகுடு....
தோற்றுப் போகிறோம் உன்னிடத்தில்...
மிச்சம் மீதி ஏதுமின்றி அச்சத்துடன்..
சதி வலைகளின் சதுரத்தினுள் சங்கமித்து
விதியென்னும் வினாவிற்கு விடைதேடி
கதியின்றி நிற்கின்றோம் நிர்கதியாய்....
தோல்விகளைத் தாங்கிக் கொண்டோம் ...
துரோகங்களைப் பழகி கொண்டோம்...
விரோதம் கொண்டு நீயும் வந்தால்
விழி பிதுங்கி நிற்கின்றோம்....
நிராயுதபாணியாய்....
வட்டிக்கு கடன் வாங்கித் தினமிங்கு வாழ்க்கையை நகர்த்துகிறோம்...
கொட்டியும் கொடுக்க வேண்டாம்...
கோடியும் அளிக்க வேண்டாம்....
அமைதியாய் ஒரு வாழ்க்கை...
அது போதும் எங்களுக்கு...
சந்தியாவின் நிழலால் பிறப்பெடுத்த சாயாபுத்திரரே..
எங்கள் சங்கடங்கள் தீரும் ஐயா.
கருமை நிறப் ப்ரியரே
உனதருமை அடியவர்க்கு
மங்கலங்கள் தாருமய்யா..
கூழோ, கஞ்சியோ தேடித் தருகிறோம்..
கூடிக் குடிக்கலாம்.. கூடவே இருக்கலாம்...
வந்தது வந்து விட்டீர்கள்...
தந்தது வரை போதும் எங்களுக்கு...
அக்கம் பக்கத்தை அனுசரித்து
அமைதியாய் இருத்து விட்டு
சத்தமின்றி போய் வரணும்...
சந்தோசமாய் அனுப்பி வைப்போம்....
வருத்திக் கொள்ள வேண்டாம் உம்மை...
வருந்திக் கொல்ல வேண்டாம் எம்மை....
இப்படிக்கு....
உன் நலம் விரும்பும் நலம் விரும்பி...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்