மொழியே நம் முகவரி
மழைத்துளியாய் வீழ்வது மேகத்தின் மொழி
மனம் வீசி அழைப்பது மலரின் மொழி
அலையாய்க் கரை தொடுவது கடலின் மொழி
சிலையாய் விழி சேர்வது கல்லின் மொழி
இசைபேசி அழைப்பது காற்றின் மொழி
திசையெட்டும் ஒலிப்பது மனித மொழி
ஆம். மொழியப்படுவதுதான் மொழியென்றாலும், உள்ளத்தின் உணர்வுகளை மற்றவர் உணர எடுத்துரைக்கும் அனைத்துமே மொழிதான். இயற்கையின் படைப்பில் உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற கல் வரை தங்கள் அழகியலை ஏதோ ஒரு வடிவில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தாலும், மனிதன் பேசும் மொழிதான் இந்த உலகின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உலகத்தின் மொத்த வாழ்வும் வளமும், மொழி என்ற ஒற்றை சொல்லிற்குள்தான் அடங்கியிருக்கிறது. ஏனெனில் ஒரு இனத்தின் வளர்ச்சி, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை அந்த இனம் பேசும் மொழியின் தொன்மையினையும் அதில் தோன்றியுள்ள இலக்கியங்களின் ஆற்றலையும் கொண்டுதான் அளவிடப்படுகிறது. அப்படிப்பட்ட மொழிதான் அவரவர் அடையாளமாய் என்றும் இருக்கும்.
மொழி என்பது வெறும் ஒலி மட்டும் அல்ல! மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல! மொழியைப்பற்றி பேசுகின்றபோது, ‘மொழி என்பது எண்ணங்களை எடுத்துச்செல்லும் ஊடகம்" என்பதையும் தாண்டி, மனித வாழ்வியலுடன் மிக ஆழமாகப் பிணைந்துள்ளது.
மொழியின் பரிமாணங்கள் பரந்துபட்டது. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம்! மொழி இல்லையேல் ஒரு இனம் இல்லை. மொழி இல்லையேல் ஒரு இனத்தின் இலக்கியங்கள் இல்லை, கலைகள் இல்லை, பண்பாடு இல்லை, மரபுகள் இல்லை, சமயங்கள் இல்லை. ஒரு இனத்தின் இலக்கியங்களை, கலைகளை, பண்பாடுகளை, சமய நம்பிக்கைகளைத் தாங்கி நிற்பது மொழி.
கேளா ஒலிகளாய்த் தொடங்கி
கருவாகி உருவாகி கேட்கும் மொழியாகி
பேச்சாகி சொல்லாகி எழுத்தாகி ஏடாகி கண்முன்னே உருமாறி உயிராயிருக்கிறது நம் தாய்மொழி..
ஒரு மனிதனுக்குத் தெரிந்த மொழியைப் பேசினால் அது அவன் அறிவை மட்டுமே அடையும், அதுவே அவன் தாய் மொழியில் சொன்னால் அவன் இதயத்தை சென்றடையும்’. என்று தென்னாப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா கூறினார். நம் சிந்தனையில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி நமக்கு கிடைத்த பெரும் சொத்து. ஏனெனில் ஒருவரின் மூளையின் சிந்திக்கும் ஆற்றலானது, அவரது தாய்மொழியில்தான் சிறப்பாக செயல்படும். அதனால்தான் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் தாய்மொழிக்கல்வியை முன்னெடுத்து வருகின்றனர்.
மனிதனின் வாழ்க்கைத்தரமும், அவனது முனேற்றமும் அவனது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. நாம்தான் மொழி. மொழி தான் நாம். அதை பாதுகாப்பத்தின் மூலமாக, நம் பாண்பாட்டைப் பாதுகாக்கிறோம். நமது தொன்மையைப் பாதுகாக்கிறோம். நமது கலாச்சாரத்தை, வழிபாட்டு முறையை, வாழ்க்கை முறையைப் பாதுகாக்கிறோம். தெளிவாகச் சொல்வதென்றால், நம்மையே நாம் பாதுகாக்கிறோம். ஏனென்றால் நம் நிகழ்கால வாழ்வோடு, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் ஆற்றல் பெற்றது மொழி ஒன்றே.
இதனால்தான், இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் தமது அடையாளத்தை காத்துக் கொள்வதற்காக, தனித்தன்மை வாய்ந்த தமது அடையாளத்தை உயர்த்துவதற்காக, அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டே இருக்கிறது. நாகலாந்து, மிசோரம், பஞ்சாப், காஷ்மீரம் என்று இந்த பட்டியல் தொடர்கிறது. இவர்கள் ஏன் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அடிப்படைக் காரணம் ஒன்றிருக்கிறது.
இனமென்று ஒன்று இவ்வுலகில் இருந்தால், அந்த இனத்திற்கென்று மொழி இருக்கும். அந்த மொழிதான் அந்த இனத்தின் முகவரியாக அடையாளப்படுத்தப்படும். ஒருவேளை அவர்களுக்கான மொழி சிதைந்துவிட்டால், அவர்கள் தாம் இந்த இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு இயலாமல் போகும். அவர்களின் சிறப்பியல்புகள் தொலைந்து போகும். முடிவில் அவர்கள் அகதிகளாக, அடிமைகளாக மாற்றப்பட்டு, நாளடைவில் அந்த இனம் அடையாளமிழந்து அழிந்து போகும். அப்படியானால் உரிமை என்பது அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை மட்டுமல்ல, அவர்கள் உரையாடுவதற்கான அடிப்படையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.
சீனத்திலே திபெத்தியர்கள் தமது தேசிய அடையாளத்தைக் காத்துக் கொள்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் ஈழத்தமிழர்கள் தங்களுக்கானப் போராட்டத்தை போராக முன்னெடுத்து சதியால் வீழ்ந்தாலும், தங்களுக்கான அரசியலை அடையாளப்படுத்துவதன் மூலம், மொழிக்கான குரலை உலகெங்கும் ஒலித்து வருகிறார்கள்.
வெறும் வாழ்வியல் தேவைகள் மட்டுமே ஒரு இனத்தை சிறப்புற செய்யாது. மாறாக, அந்த இனத்திற்கான தேவைகளில் அடிப்படையாக தமது இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவைகளைத் தாண்டி தமது வாழ்வியல் தேவைகளான ஆன்ம ஒன்றிணைப்பு இங்கே அவசியமாகிறது. இவர்கள் ஆத்மார்த்த ரீதியாக ஒன்றிணைவதற்கு எது காரணம் என்று பார்த்தோமேயானால், அங்கே மொழி பேராதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் தாய்க்கு நிகராக தாய் மொழியை நேசிக்கிறார்கள். தாயை மறப்பதும், மொழியை மறப்பதும் இருவேறு நிலைகள் அல்ல.
உலக வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகும். அதாவது ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் எதிரிகள் முதலில் அந்த இனத்தில் மொழியை அழித்திருக்கின்றார்கள். மொழி அழிந்தால் ஒரு இனம் தானாகவே அழிந்துவிடும்.
மொழி என்பது ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு தன் பண்பாட்டை எடுத்துச் செல்லும் வழி. அந்த வழி தடைபடும் போது, மரபணு மாற்றம் பெற்ற உயிர்களாக மாறி, தனித்தன்மையை இழந்து விடுவார்கள்.
இலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்நூலத்தில் எரிந்து அழிந்தது வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. தமிழரின் கடந்த காலத்தின் சுவடுகளும்தான்.
தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது வெறும் ‘வழி’ மட்டுமல்ல, அதுதான் நமது ‘விழி.’ அதுதான் நம்மை இந்த உலகிற்கும், உலகை நமக்கும் காட்டுகிறது. ஏனென்றால் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழின் எழுச்சி, வீழ்ச்சி தமிழின் வெளிச்சம், இருட்டு ,தமிழின் மேடு, பள்ளம் இவற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மைப் புலப்படும். அதாவது தமிழனின் மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
ஒரு மண்ணில் வீசும் காற்று மொழியை சுமந்து கொண்டு, சுற்றிச்சுற்றி காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து மகிழ்விக்கிறது. அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது.. இவையெல்லாம் மொழியாலே இனிக்கிறது. அதனால் அந்த மொழியை, நம் முகவரியைக் காப்பாற்றுவது நமது தலையாயக் கடமையாகும்.
ஒரு மொழியின் செழுமை அந்த மொழி பேசும் மற்றும் அதை பாதுகாக்க துடிக்கும் அந்த சமூகத்தினரின் கையிலே உள்ளது. அதைச் சாத்தியமாக்குவது இன்றைய இளையதலைமுறையின் கையில்தான் உள்ளது. அதற்கு அனைவரும் துணை நின்று அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.சாதி மத வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்ற வேண்டும். அதை நம் உயர்வுக்கு பயன்படுத்துவோம். தாய் மொழியைக் காப்போம். அதை உயர்த்துவோம்.. நம் முகவரியை , அடையாளத்தைக் காத்திடுவோம்.