ஒற்றைப் பெற்றோர் - பெண்கள் மீது திணிக்கப்படும் சமூக அவலங்கள்
தூய்மையான கருவறையில் தெய்வங்கள் இருப்பதைப் போல, தாயின் கருவறையிலிருந்து குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களின் மனதும் பாலினைப் போல மிகத்தூய்மையாய் இருப்பதாலேயே அவர்களைப் பால்மனம் மாறாத பச்சிளங்குழந்தை என்றழைப்பதோடு, குழந்தைகளை கடவுளுக்கு நிகராகப் போற்றுகிறோம். தன்னைச் சுற்றி இருக்கும் இரும்புத்துகள்களை ஈர்க்கும் காந்தத்தைப் போல, குழந்தைகள் தங்களைச் சுற்றி இருக்கும் சூழ்நிலை மற்றும் தங்களோடு தொடர்பிலிருக்கும் உயிர்களின் குணங்களை கிரகித்து வளரத் தொடங்குகின்றனர். அதுவே நாளடைவில் அவர்களின் குணாதியமாக மாறிவிடுகிறது.
இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் அனைவரும் பங்கெடுத்தாலும், பெரும்பங்கானது பெற்றோரையே சாரும். ஏனெனில் அவர்களின் மூலமாகவே குழந்தையானது இந்த உலகை அறிய முற்படுகிறது. கணவன் மற்றும் மனைவி இருவருக்குமான உறவுகளின் நிலையும் குழந்தையின் மனநிலையில் பெருந்தாக்கத்தை உண்டாக்கும். உதாரணமாக அடிக்கடி சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் குழந்தையின் மனநிலையானது ஆக்ரோசமானதாகவோ, பயந்த சுபாவமாகவோ மாறிவிடுகிறது.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பெற்றோரில் ஒருவர் சந்தர்ப்பத்தினாலோ, விதியாலோ மற்றொருவரைப் பிரிந்தோ/இழந்தோ வாழும் சூழ்நிலை சிலருக்கு அமைகிறது. ஒற்றைப் பெற்றோர் (Single Parent) என்றழைக்கப்படும் அவர்கள் குழந்தைகளைப் பேணுவதில் சற்று அதிகமாகவே சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆணாய் இருந்தால் குழந்தை வளர்ப்பிலும்,பெண்ணாய் இருந்தால் நிதி நெருக்கடியிலும் பெரும்பாலும் தள்ளப்படுகிறார்கள்.
ஆணும் பெண்ணும் சமம் என்று ஆயிரம் மேடைகளில் முழக்கங்கள் எழுந்தாலும், இன்னும் அதற்கான சூழல் அமைவதற்கு இந்த சமூகம் அனுமதிப்பதே இல்லை. மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்கும் ஆணைப் பார்த்து பரிதாபப் பார்வை வீசி கரிசனம் காட்டும் இந்த உலகம், கணவனை இழந்து/பிரிந்து தனியாகப் பிள்ளைகளை வளர்க்கும் பெண்களை கருணையுடன் காண்பதே இல்லை. மாறாக அவர்கள மீது ஒரு வன்மத்தை மட்டுமே திணித்து வருகிறது. அவர்களின் வலியை உணராத சமூகம், தங்கள் சுயலாபத்துக்காக கேலிக்கூத்தாக்கி மகிழ்கிறது..
மனைவியை பிரிந்த ஆண்களுக்கு பிரதிபலன் பார்க்காமல் உதவிகளைச் செய்ய முற்படும் அதே வேளையில், பிள்ளைகளை காரணம் காட்டி, மறுமணம் செய்தும் வைக்கிறார்கள். ஆனால் கணவனைப் பிரிந்த பெண்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க தவறிவிடுகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் சிலரில் ஒரு சாரார்,ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்தே செய்கிறார்கள். அது கிடைக்காத பட்சத்தில், அவர்களைப் பற்றி அவதூறுகளை பரப்பி களங்கம் கற்பிக்க ஒரு பெருங்கூட்டமே வேலை செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த கேவலமான செயலை, ஆண்களை விடப் பெண்களை அதிகம் செய்து வருகின்றனர்.
தனித்து வாழும் பெண்கள் தங்களை குழந்தைகளை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. அந்த பெண்ணின் நடை, உடை, பேச்சு எல்லாவற்றையுமே விவாதித்து அதற்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி இலவச விளம்பரம் செய்யும் சமூக சேவையாளர்கள் அதிகம் உண்டு.
வீட்டருகில் மட்டுமல்ல, வேலை செய்யும் இடத்திலும் ஒரு சில ஆண்களின் வக்கிரப்பார்வைக்கு தப்பி பிழைப்பது அரிதிலும் அரிதாய் மாறிவிடுகிறது. சாதாரணமாக நட்பாகப் பேசினால் கூட அவள் அப்படி, அவள் இப்படி என்று அவரவர் விருப்பத்திற்கு உருவம் கொடுத்து உலாவ விடுகின்றனர். இதைக் கேட்கும் மூன்றாம் நபரும் அதை உண்மையென்றே நம்பிவிடுவதால், அது சங்கிலித் தொடராகி அந்தப் பெண்ணின் வாழ்வினை தடுமாற வைப்பதோடு, அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.
பெண்களுக்கு மறுமணம் என்பது இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை தயக்கமே இருந்து வருகிறது. பெரும்பாலும் தாய்வழிச் சொந்தமான தாத்தா பாட்டி மீதே அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு விழுகிறது. தந்தையை இழந்த அவர்களுக்கு தாயின் அரவணைப்பும் முழுமையாய்க் கிடைப்பதில்லை. அந்த குழந்தை உணரும் வலியானது, அனாதைக் குழந்தையின் வலியை விட பல மடங்கு அதிகம். மறுமணத்தில், ஆணின் குழந்தைகளை ஏற்றுக்கொள்வதைப் போல, பெண்ணுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் ஏற்று தந்தையாய் தனது கடமைகளை ஒரு ஆணும், சுற்றமாய் அவரின் உறவுகளும் துணை நிற்க வேண்டும்.
தனித்து வாழும் ஒற்றைப் பெற்றோரின் வலியினை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்திட முயற்சி செய்வோம். உதவிகள் செய்து உறுதுணையாக இருக்கா முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு உபத்திரமாக இருக்க வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் சுற்றமும் நட்புமான நமது பங்களிப்பு உள்ளது. அதைச் சிறப்பாகச் செய்து நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்கும்..
வாழ்த்துக்களுடன்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்