மரத்துப் போனதோ? மரித்துப் போனதோ? - நீளும் நீட் மரணங்கள்
அன்று இறந்த
அனிதாவின் மரணம் மட்டும்,
பேசுபொருளானது...
ஊடகத்தில்...
தலையங்கமானது...
செய்தித்தாள்களில்...
தனிக் கருத்தரங்கங்கள்
தினமோடியது தொலைக்காட்சியில்...
சிலை வைத்தார்கள்...
மண்டபம் எழுப்பினார்கள்...
அறக்கட்டளை தொடங்கினார்கள்...
அன்றிலிருந்து இன்றுவரை
ஆயிரம் அனிதாக்கள்,
அமரராகிவிட்டனர்...
ஊடகத்தின் கண்களுக்கு,
அற்பமாகிவிட்டனர்...
உணர்வெழுப்ப போராடியவர்கள்
உயிரற்றுப் போனார்கள்..
அன்று,
முதலைகள் கண்ணீர் வடித்து
முன்னிலை வகித்தவர்களுக்கு,
உயிர்கள் சமமென்று
உள்ளுக்குள் தோன்றாமல்,
ஊமையாகி விட்டனர்...
இன்று...
நீட்டும் நீள்கிறது...
மரணங்களும் தொடர்கிறது..
சாதாரண செய்தியாக...
மானமென்று வெகுண்டெழுந்த
மனங்களெல்லாமின்று
மறந்து போனதோ??
மரத்துப் போனதோ??
இல்லை..,
மரித்துதான் போனதோ???
அன்று
குற்றமென்று வாதிட்டோர்,
குளிர்கால உறக்கத்தில்,
இருக்கிறார்கள் போலும்..
அடுத்த வேனிற் காலம் பிறக்கலாம்.
அவர்களின் தேவைக்காலம் வரும்போது...
அவதாரம் பூண்டவர்கள்,
அரிதாரம் வெளுத்தால்தான்,
அதற்கொரு விடை கிடைக்கும்...
இல்லையெனில்,
இதற்கான முடிவொன்று
இப்போது கிடைக்காது...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்