தலைக்குப் பொருந்தாத கிரீடம்
மனித வாழ்க்கையில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் பல்வேறு நிலைகள் உள்ளன. அதில் திருமணம், குழந்தைகள் என்பது வாழ்க்கையை அடுத்த நிலையைப் பிரதிபலிக்கும் சின்னமாகச் சமுதாயத்தால் பார்க்கப்படுகிறது. பட்டாம்பூச்சிகளாய்ச் சுற்றித்திரிபவர்களைக் கூட, தங்கள் வாழ்வில் திருமணம், குழந்தை போன்றவற்றைக் கடக்கும்போது, வேறு பரிணாம நிலையை அடைகிறார்கள். இருவருமே மனதளவில் ஒரு முதிர்வைப் பெற்றாலும், அதைப் வெளிப்படுத்தும் இடங்களை பெரும்பாலானோர் உணர்வதில்லை.
இதில் ஆண்கள் அடக்கி வாசித்தாலும், பெண்கள் சற்று எல்லைமீறவே செய்கிறார்கள். பெண்கள் மணமான ஓரிரு மாதங்களுக்குள்ளேயே, தங்களைப் பெரிய மனுஷியாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள். பெண்களின் பேச்சு, நடவடிக்கை என அனைத்தும் மாறி அவர்கள் வேறு ஒருவராக நடந்திட முயற்சி செய்கிறார்கள்.
சக தோழியிடமோ அல்லது ஒத்த வயதில் உள்ளவர்களிடமோ அந்த முதிர்வைக் காட்டும் போதுதான் சிக்கல்கள் பிறக்கிறது. உதாரணமாக, திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் ஒரு சக தோழியிடம் பேசும் போது, முன்னர் போல் பேச முடிவதில்லை. அவர்களின் நட்பெனும் தொடர்பு துண்டிக்கப்படுவது காரணமாக இருந்தாலும், பெரும்பாலும் அந்த பழைய பிணைப்பை அவர்களால் உணர முடிவதில்லை.
அதிலும் மணமான ஒரு பெண், மணம் ஆகாத பெண்ணைப் பார்க்கும் போது, அவர்களின் மனதில், " இவளுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை? " என்பதிலேயே அலைபாயத் தொடங்குகிறது. அவர்கள் சந்திக்கும் என்ன பேசினாலும், அவர்கள் கடைசியில் திருமணம் பற்றிய கேள்வியிலேயே வந்து நிற்கும்.
என்ன ஆச்சு?...
ஏன் கல்யாணம் ஆகலை..
ஏதும் பிரச்சனையா?..
அந்தக் கோவிலுக்குப் போ..
இந்தப் பரிகாரம் பண்ணு.
அப்படி இப்படி என்று அவர்களின் சிறு குட்டை அனுபவத்தைக் கொண்டு கடல்நீரையே வாரி இறைத்துவிடுகிறார்கள். அதுவும் எதிர்கொள்பவரின் தர்மசங்கடத்தை உணராமல், நாம் எங்கு இருக்கிறோம் என்பதையும் மறந்து கேள்விக் கணைகளால் துளைத்துவிடுகிறார்கள். மற்றவர்க்கு ஏன் இங்கு வந்தோம், எதற்காக இவளிடம் பேசினோம் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடுகிறார்கள்.
திருமணமாகி குழந்தை பெற்ற பெண், குழந்தை இல்லாதவரைக் கண்டால் நிலைமை இன்னும் மோசமாகும். சித்த வைத்தியம், பாட்டி வைத்தியத்தில் நாட்டு வைத்தியத்தில் தொடங்கி செயற்கை கருத்தரிப்பு வரை பேசி அவர்களை நிலைகுலையச் செய்துவிடுவார்கள்.
இதில் பெரும்பாலானோர் உள்ளார்ந்த அன்பினால் பேசுவதில்லை என்பதே நிதர்சனம். அவர்களின் பெரியவர்களாக, அறிவுரை வழங்கும் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவே செய்கிறார்கள். அதிலும் இன்னும் சில பிறவிகள் குத்திக்காட்டி குற்றம் சொல்வதற்காகவும், காயப்படுத்துவதற்காகவும் மட்டுமே பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.
இதில் கவனிக்கவேண்டியை இரண்டு.நீங்கள் உள்ளார்ந்த அன்பாலும் அக்கறையாலும் பேசினாலும், அதற்கான இடம் அது கிடையாது. பொதுவெளியிலோ, சுபநிகழ்விலோ இது போன்று பேசுவது உகந்தது அல்ல. அது மணமாகாத, குழந்தையில்லாத பெண்களைக் காயப்படுத்துவதோடு, உளவியல் ரீதியாக பலவீனமாக்கும்.
அவர்களும் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளவே வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்களின் குறையிலோ, சூழ்நிலையையோ, இயலாமையிலோ நினைவுபடுத்தி அவர்களை வருந்தச் செய்வது எப்படி சரியாக இருக்கும்?..
நம் பெரியவர்கள் இடம் பொருள் ஏவல் என்று நமக்கு சொல்லி இருக்கிறார்கள். நல்ல விடயமாகவே இருந்தாலும், அதற்கு ஏற்ற இடத்தில் மட்டுமே பேச வேண்டும்.
உங்களுக்கு உண்மையிலேயே அன்பிருந்தால் தனியாக அவர்களை சந்தித்தோ, தொடர்பு கொண்டோ அதைப் பற்றி பேசுங்கள். அவர்களுக்கு உதவ முடிந்தால் தாராளமாகச் செய்யுங்கள். அதைவிட்டு விட்டு, பொது இடத்தில் வைத்து, உனக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை, வேலை கிடைக்கவில்லை, குழந்தை பிறக்கவில்லை என்று ஆராய்ச்சி செய்ய முயற்சி செய்யாதீர்கள்.
வயதானவர்கள் கேட்கிறார்கள் என்றால் கூட கடந்து சென்று விடலாம். சக வயதுள்ள நீங்களே, இது போன்று கேள்விக் கணைகளை வீசி, உங்கள் சக வயதுள்ளவர் மனதை காய்ப்படுத்த வேண்டாம். அது உங்கள் தலைக்குப் பொருந்தாத கீரிடத்தை மாட்டிக்கொள்ள முயற்சிப்பதைப் போன்றது.
சுந்தரபாண்டியன் படத்தில் இறுதிக்காட்சியில் சசிக்குமார் சொல்வது தான் நினைவுக்கு வருகிறது.
வயதானப் பெரியவர்கள் கேட்கிறார்கள் சரி. நீங்களும் அதையே கேட்டால் எப்படி. சக வயது உள்ளவனின் சூழலை நீங்களேப் புரிந்து கொள்ளாவிட்டால், வேறு யார் புரிந்து கொள்வார்கள்..
#சிந்தித்து_செயலாற்றுங்கள்.
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்.