இராமாயணம் : போற்ற மறந்த தியாகி - ஊர்மிளா
ராமனின் வீரம் தெரியும்
சீதையின் தூய்மை தெரியும்
பரதனின் பாசம் தெரியும்
இலக்குவன் சேவை தெரியும்...
மிஞ்சிப் போனால் கொஞ்சம் பேசுவோம்
நங்கையை கவர்ந்தான் லங்கை வேந்தன்
இவ்வளவுதான் இராமாயணமா??
இதற்கு மேல் என்ன வேண்டும் ??
யார் இருக்கிறார்கள்....
இதற்கு மேல் இராமயணத்தில்...
இருக்கிறாள்....
எனக்கு தெரிந்ததை
எடுத்து சொல்கிறேன்...
முடிந்தால் படியுங்கள்...
பிடித்தால் பகிருங்கள்...
மேலோட்டமாய்ப் பார்த்தால் புரியாது...
உயிரோட்டமாய் படித்துப் பார்...
உள்ளத்தில் தெரிவாள்
ஊர்மிளை யாரென்று
உமக்கும் புரிவாள்...
அப்படி என்ன செய்து விட்டாள்
அதிசயத்தை இவள்....
இராமனோடு சீதையவள் உடன் செல்ல
இளவல் இலக்குவன் துணை செல்ல
தலைவன் மொழிதனைத் தான் ஏற்று
தனித்தே காத்திருந்தாள் இல்லத்தில்...
உள்ளத்தின் வலிகளெல்லாம்
உள்ளுக்குள் புதைத்து வைத்து
உதடுகளில் புன்னகை வைத்து
இலக்குவனை அனுப்பி வைத்தாள்
இதயத்தால் நொறுங்கி நின்றாள்..
ஆழியலைப் போல அத்தனையும் விழுங்கி
போலிப் புன்னகையால் போய் வரச் சொன்னாள்
தாலி கட்டியவன் பார்வையில் மறைய
தன்விழி நீர்கோர்க்க தவித்து நின்றாள்..
ஈரேழு ஆண்டுகள் இல்வாழ்க்கை மறந்தாள்
இதயத்தில் மட்டும் இல்லானை நினைந்தாள்
தலைவன் நித்திரையை தன்னோடு ஏற்றாள்
தனிமையின் வலிகளை நெஞ்சோடு சுமந்தாள்..
உண்ண மறந்தாள் உடுக்க மறந்தாள்
உறக்கம் மட்டும் துணயாய்க் கொண்டாள்
தலைவனின் கடைமைத் தீயில்
தன்னையே எரியச் செய்தாள்..
தானேற்ற கடமையை முடித்துவிட்டு,
தமையனுடன் இலக்குவன் வரும் வரையில்,
இலட்சியத்தை நெஞ்சினில் எரியவிட்டு
இராமகாவியத்தில் உயர்ந்து நின்றாள்..
உடன் இருந்து வாழ்வது மட்டும் காதலல்ல...
உள்ளத்தில் நினைந்து வாழ்வதும் காதலென்ற
உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த
ஊர்மிளையே அயனத்தின் நாயகியாம்..
காவிய காலத்தின் தியாகிகளை
கதை கதையாய் கேட்டிங்கு வாழ்கின்றோம்.
இன்றைக்கும் இருக்கிறார்கள் இல்லத்தில்..
இதுபோன்ற ஊர்மிளைகள் ஏராளம்..
எல்லை காக்கும் பணி செய்ய
எல்லை தாண்டியும் பணி செய்ய
கடல் தாண்டி கணவன் செல்ல
காத்திருக்கிறார்கள் காதலோடு...
உள்ளத்தின் வலி மறைத்து
ஊர்மிளைகள்... உண்மையாய்... ஊமையாய்....
எங்கேனும் எதிர்ப்படும் ஊர்மிளைகளை,
ஏற்றத்தில் புகழாவிட்டாலும் பரவாயில்லை...
எண்ணத்தால் இகழ வேண்டாம்.
அவர்தம் உள்ளத்தை வருத்த வேண்டாம்...
உணர்வுக்கு மதிப்பளித்து உள்ளத்தால் உயர்ந்திடுங்கள்...
எண்ணத்தில் சிறப்புற்று
எழிலாய் வாழ்ந்திடுங்கள்..
வாழ்த்துக்களுடன்
✍ கவிஞர் விஜயநேத்ரன்