தவறு சட்டத்தில் இல்லை; அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான்- என்னங்க சார் உங்க சட்டம்
அரசியல் அமைப்பு சட்டத்தில் பல வரைவுகள் இருந்தாலும், அதிகம் பேசுபொருளாகி விவாதிக்கப்படுவது இட ஒதுக்கீடும் சலுகைகளும்தான். ஏனெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் பலருக்கும் இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஏனெனில் இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானது என்ற பிம்பமே இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், பெரும்பாலும் அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டால் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுத்தான் வருகிறோம். ஆனால் அதைப் பெறும் விகிதத்தில் வேறுபாடு இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தைக் கருத்தில் கொண்டு, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் அதிக அளவு ஒதுக்கீடுகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அந்த சமுதாயம் பயன்பெற்று அடுத்த நிலையை அடைந்ததா??
இந்த கேள்விக்கு விடை தேடினால், அது புதிராக இன்னும் பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது.
ஆம்.. நிச்சயமாக சலுகைகளால் பயன்பெற்று முன்னேறி உள்ளனர். அப்படியெனில், கிட்டதட்ட 70, 80 ஆண்டுகளாகப் பயன்பெற்று வரும் அந்த சமூகம் மேம்பட்ட ஒன்றாக மாறி இருக்க வேண்டும். ஆனால், இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்பதிலிருந்தே, அதில் ஏதோ குறைபாடு உள்ளது என்பது வெளிச்சமாகிறது.
ஏன்??. இட ஒதுக்கீட்டால் பயனடைந்தும் இன்னும் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. ஒருவேளை, ஆதிக்க சாதியினரும், அரசியல்வாதிகளும் காரணமாய் இருக்கலாம் என்று தோன்றுகிறதுதானே.
ஆம். அது காரணமாய் இருந்தாலும், அதையே முழுமையான காரணமாய்ச் சொல்ல முடியாது.
ஏனெனில், இந்த சட்டங்களும் சலுகைகளும் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை மறந்து, அதனால் பயனடைகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அந்த சலுகைகளைப் பயன்படுத்தி மேலே வந்தவர்களும், அவரது தலைமுறையினரும், அதே சலுகையை மீண்டும் மீண்டும் அதிகம் அனுபவித்து வருகின்றனர். அதனால் அவர்களின் ஆற்றலும் திறனும் மேம்பட்டு இருப்பதால், அவர்களுடன் போட்டியிடும் எவ்வித வசதியும் இல்லாத அதே சமூகத்தை சேர்ந்தவர்களை எளிதாக வீழ்த்தி அந்த சலுகைகளை அனுபவிக்க முடிகிறது.
பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடியினரில் இருந்து சலுகையைப் பெற்று உயர்ந்த பதவிக்கு வந்த ஒருவரின் வாரிசுடன், பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்க இடமின்றி, ஒருவேளை உணவிற்கே போராடும் அதே சமூகத்தை சேர்ந்த ஒருவனால் எப்படி, எல்லா வசதிகளையும் பெற்று அறிவுத்திறனில் மேம்பட்டு இருக்கும் அவர்களுடன் சரிசமமாகப் போராட முடியும்.
ஒரு முறை அரசின் (இட ஒதுக்கீட்டு) சலுகையைப் பெற்று, அதனால் அடுத்த நிலைக்கு உயர்ந்தவர்கள் ( அவர்களது தலைமுறையும் ), மீண்டும் அதைப் பெற முயற்சிக்காமல், அதே சமூகத்தைச் சேர்ந்த ( அவசியமான) ஒருவர் அதைப் பெற்று அவரது தலைமுறையும் உயர உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்து வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
ஏனெனில் அந்த சலுகை குறிப்பிட்ட அந்த மேல் வர்க்கத்திற்கு தேவையில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்து சலுகையை அனுபவிப்பதால், அது தேவைப்படும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.
ஒரே வகுப்பைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனும், கூலித் தொழிலாளியின் மகனும் ஒரு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, சலுகையை கூலித்தொழிலாளியின் மகனுக்கே வழங்க வேண்டும். தொழிலதிபரின் மகனுக்கு அந்த சலுகை அவசியமில்லை அவரால் அந்த சலுகை இன்றியும் மருத்துவராகலாம். ஆனால் அதே சமூகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனுக்கு அரசின் இட ஒதுக்கீடும், சலுகையும் மிக மிக அவசியம். அது கிடைக்காமல் போனால், அவரது தலைமுறையும் கூலியாகவே முடிந்து விடும்.
அந்த தொழிலதிபரின் மகன் சலுகையை வேண்டாமென்று விட்டுக்கொடுக்கும் போது, அதே சமூகத்தை சேர்ந்த அடுத்த நிலையில் இருக்கும் யாரோ ஒருவரின் தலைமுறை அடுத்த நிலைக்கு உயரும் ஒரு நல்வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.
இதற்காகத்தானே, இந்த வர்க்கபேதத்தை மாற்றுவதற்காகத்தானே அரசியல் அமைப்பில் இட ஒதுக்கீடுகளும் சலுகைகளும் வரையறுக்கப்பட்டன. ஆனால் எல்லா வசதிகளும் பெற்று தன்னிறைவு அடைந்த பின்னரும், நானும் இந்த சமூகத்தில் பிறந்திருக்கிறேன். எனக்கும் இந்தப் சலுகையில் உரிமை உள்ளது என்று தர்க்கம் பேசுவது சரியாய் அமையாது.
நாம் பயன்படுத்திய பொருளை, நமக்கு அவசியம் இல்லையென்றாலோ, தேவைப்படவில்லை என்றாலோ, மற்றவர்களுக்கு கொடுக்க மனம் இல்லாவிட்டாலும், நமது தம்பி தங்கைகளுக்கு கொடுப்போம்தானே. அதுபோல்தான் உங்களுக்கு அவசியம் இல்லையென்றால், அந்த சலுகை, உங்கள் (சமூகத்தை சேர்ந்த) தம்பி தங்கையருக்கு கிடைக்கட்டுமே. அதனால் அந்தப் பொருளின் பயன்பாடும், நோக்கமும் நிறைவேறும். இது அப்படியே சங்கிலித்தொடராய் தொடரும் பட்சத்தில், உங்கள் சமூகம் மொத்தமும் வர்க்க பேதத்தை உடைத்து மேம்பட்ட வாழ்வினை அடையும் நிலைக்கு உயரும்.
உதவியோ, சலுகையோ தேவைப்படுவோருக்கு வழங்குவதை விட, அது அவசியம் தேவையான ஒருவருக்கு கிடைப்பதே மிகச்சரியாய் இருக்கும் என்பது என் கருத்து.
சாதி அரசியலை விட மிக மிகக் கொடியது வர்க்க அரசியல். பொருளாதார ரீதியில் ஒரு தலைமுறை மேல்மட்டத்தை அடையும் போது, அந்த இரண்டு கொடிய விடயங்களும் மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.
இதைக் கருவாக்கி உருவாக்கியதற்கு வாழ்த்தும், அதே வேளையில் தேவையில்லாத ( பொறுமையை சோதித்த முதல் பாதியை) ஆணிகளை முடிந்தவரையில் தவிர்த்து இருந்தால், சிறப்பான படைப்பாக இருந்திருக்கும்.
இந்தப் படத்தைப் பற்றிய உங்களது பார்வை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் உட்கருத்தை மட்டும் உள்ளத்தில் நிறுத்துவோம்.
உங்கள் பசி தீர்ந்த பிறகு நீங்கள் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், யாரோ ஒருவனின் பசி தீர்க்க உருவாக்கப்பட்டது. அந்த ஒரு பருக்கைக்காக உங்கள் தலைமுறையில் ஒருவர் காத்திருந்தது போலவே, யாரோ ஒருவர் காத்திருக்கிறார். அவரது தலைமுறையும் பசியின்றி வாழ்வதற்கு...
சிந்தித்து செயலாற்றுங்கள்...