ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை
மனிதர் அனைவரும் சமம் என்று பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் முழுமையாய் வெளிப்படுத்தினாலும், நடைமுறை வாழ்வில் அதற்கான நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அவருக்கு அடுத்த நிலையில் வேலை செய்பவருக்கு சரியான மரியாதை அளிப்பதில் தொடங்கி, வசதியற்ற ஒருவரின் சுயமரியாதையை மதிக்கும் மாண்பு வரை எதற்கும் சரியான பதில் கிடைப்பதில்லை.
தனக்கு கீழே பதவியிலோ, சாதியிலோ, வசதியிலோ குறைந்தவராக நினைக்கும் ஒருவரை, அவர் வயதில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், மதித்து மரியாதையாக நடத்தும் மாண்பு பலருக்கும் இருப்பதில்லை. ஏதோ ஆடு மாடு போன்ற அஃறிணைப் பொருள்களை அழைப்பது போல, ஒருமையில் அழைப்பதே பெரும்பாலனவர்களின் மனப்போக்காக இன்றும் இருந்து வருகிறது.
வசதி படைத்தவர்களின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் இயக்கத்திற்கு அசையும் ஒரு பாவையாகவே அதிகாரமும், ஆட்சியும் இருந்து வருகிறது. இன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பண பலம் இருப்பவர்களும், பதவி அதிகாரம் இருப்பவர்களும், எவ்வளவு பெரிய குற்ற வழக்கிலிருந்தும் எளிதாக வெளியே வரும் அதே நேரத்தில், சின்னஞ்சிறு தவறுகளுக்கும், பொய் வழக்குகளிலும் குற்றவாளியாகும் அடிமட்ட மனிதர்களின் நிலை இன்றும் பரிதாபம்தான்.
தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கே இன்னும் பல பகுதிகளில் சரியான மரியாதை கிடைக்காத இந்த காலத்தில், பழங்குடியினரின் நிலையை இன்னும் கேட்கவே வேண்டியதில்லை. அவர்களை மனிதர்களாக நினைக்கும் எண்ணமே பலருக்கும் வருவதில்லை. அப்படி இருக்கையில் அவர்களின் உணர்வுகளுக்கும், வார்த்தைகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்கள். இயற்கையை காப்பாற்றி வரும் பழங்குடியினரின் வாழ்வாதாரம், அந்த இயற்கையைப் போலவே கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை வெறியாட்டங்கள் பெரிதாக வெளியுலகத்திற்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் அவர்களுக்காக முன்நின்று போராடவோ, உண்மையாய் குரல் கொடுக்கவோ ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். இன்று பேஸ்புக், யூடியுப், செல்போன் என விஞ்ஞான வளர்ச்சியில் சில நிகழ்வுகள் வெளிவருகிறது.
ஆனால் இது எதுவும் இல்லாத 25, 30 வருடங்களுக்கு முன்பாக நினைத்துப் பாருங்கள். அப்படி நடந்த ஒரு சம்பவத்தையே "ஜெய்பீம்" படமாக்கி வெளி உலகிற்கு காட்டியுள்ளனர்
சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும் பழங்குடியினர் கைதிகளை, நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத கொலை கொள்ளை வழக்குகளுக்காக கைது செய்து அழைத்துச் செல்லும் ஆரம்பக் காட்சியுடன் தொடங்குகிறது.
அதுவே படத்தின் மையக் கருவை சொல்லிவிட்டாலும், இன்னும் நாம் மாற்ற வேண்டிய, மாற வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்பதை படம் முழுதும் காட்சிப்படுத்தி உள்ளார்.
பழங்குடியினரை, சக மனிதனாகப் பார்க்காத மனநிலையை பல இடங்களில் நடப்பதாகக் காட்டப்படும் காட்சிகள், 25 வருடங்களுக்கு முன்பாக நடப்பதாகக் காட்டப்பட்டாலும் இன்றும் அதில் பெரிய மாற்றம் இல்லாமல் இருப்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவரை சந்தேக வழக்கில் கைது செய்து, முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் அடித்து சித்ரவதை செய்து அதை மறைக்கும் போலீசாரின் தகிடுதத்தங்களை தோலுரிக்கும் காட்சிகள் நம் இதயத்தில் நாம் இன்னும் மாற வேண்டும் என்ற நெருடலை உண்டாக்கி இருக்கிறது. அதுவே இப்படத்தின் வெற்றி.
அனுதாபத்திற்காகவும், கமர்சியலுக்காவும் ஒரு சில மிகைப்படுத்துதல் இருந்தாலும், நிகழ்கால மனநிலையை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய ஒரு கேள்வியை நம் முன்னே வைத்திருக்கிறது "ஜெய் பீம் "
எவ்வித உதவியுமின்றி 90களில் தனியொருவனாக பழங்குடியனரின் உரிமைக்காகப் போராடி, பல்வேறு வழக்குளில் எவ்வித ஆதாயமும் பெறாமல், பெரும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராடிய நீதியரசர் சந்துருவின் வாழ்க்கை நாம் வணங்க வேண்டிய ஒன்று. அவரைப் போன்ற மனிதர்களை அடையாளம் கண்டு, வாழ்த்துவதோடு, உறுதுணையாக இருக்க வேண்டிய நமது கடமையாகும்.
எழுத்திலும் பேச்சிலும் உள்ள சமத்துவம், நம் எண்ணத்திலும் இருந்தால், மண்ணில் பிறந்த அனைவரும் சமமென்ற மாண்பு விரைவில் அரங்கேறும். உண்மையாய்....