இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பதற்கான அர்த்தமே மாறி விட்டது. எதிர்கட்சியாக இருக்கும் போது அவர்களை வசைபாடுவதும், கூட்டணிக் கட்சியாய் மாறியதும் அவர்களின் குற்றங்களுக்ளுக்கு திரை போடுவதும் தான் அரசியல் என்ற நிலையாகிவிட்டது.
வெறும் பதவி சுகத்திற்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும், அதிகாரத்திற்காகவும் மட்டுமே அரசியலை பயன்படுத்தி வருகின்றனர். மக்களை வெறும் வாக்குகளாக பார்க்கும் இவ்வேளையில், மக்களிடமும் வாக்களிப்பதன் முக்கியத்துவமும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவும் இல்லாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட யார் பதவிக்கு வரக்கூடாது என்பதே பெரும்பலானவர்களின் தேர்வாக இருக்கிறது. பலர் போலியான விளம்பரங்களையும், கவர்ச்சியான தேர்தல் அறிக்கைகளையும் பார்த்து ஏமாந்து வாக்களிக்கின்றனர்.
மெத்த படித்தவர்களின் நிலைமை இதைவிட கொடுமை. அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பதை தங்கள் கடைமையாக எண்ணுவதே கிடையாது. அதிகம் படித்தவர்களும், தமிழ்நாட்டின் வருவாயில் அதிக தொகையை அனுபவிப்பதும் தலைநகரான சென்னை மட்டுமே.. ஆனால் அங்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 60% சதவீதம் தாண்டுவதே பெரிய சாதனையாக இருக்கிறது. பலர் அதை விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கும் பரிதாப நிலையே உள்ளது. இது அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்மையையே வெளிக்காட்டுகிறது.
இன்றைய அரசியல்வாதிகள் என்னசெய்கிறார்கள்?. ஒவ்வொரு கட்சியிலும் தலைமையில் இருப்பவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மட்டுமே பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர். ஒரு மாநிலக் கட்சி, பாதிக்கு மேல் வாரிசுகளை வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளது. இன்னொரு கட்சி மதத்தையும் சாதியையும் மட்டுமே பயன்படுத்தி வாக்கு கேட்கிறது.
சிலரின் ஆதங்கம் என்னவெனில் இந்த நாட்டில் நல்ல அரசியல்வாதிகளே இல்லையா??. இருந்தார்கள்.. நாம் எங்கே அவர்களை விட்டு வைத்தோம். நமது ஓட்டுக்கு பணம்தானே முதலீடாக உள்ளது. கக்கன், காமராசருக்கு நாம் என்ன பரிசளித்தோம்.
இளைஞர்கள் படித்தவர்கள் அரசியலில் நுழைந்தால் அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை. நமக்கு கட்சியும் சின்னமும் சாதியும் மதமும் தான் பெரிதாக தெரிகின்றது.அதற்குத்தான் நமது வாக்கு என்ற மனநிலை உண்டாகி உள்ளது. பிறகு எப்படி அரசியல் சாக்கடை சுத்தமாகும்?.
இன்னும் சில அரசியல்வாதிகள் ஒவ்வொரு மரணத்தையும் அரசியாலாக்கி அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான நீதி இன்னும் கிடைத்தபாடில்லை..
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று அரசியலுக்காக கொலைகளையும், கலவரத்தையும் உண்டாக்கி, அந்த நெருப்பில் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அரசியலா?? . பள்ளி செல்ல வேண்டிய மாணவன் கையில் அரிவாளுடன் சாதி வெறியில் அழைகிறான். அவனை மூளைச்சலவை செய்வதுதான் அரசியலா?? .
அரசியல்வாதிகளின் வாரிசுகள் டாக்டர், இன்ஜினியர், அடுத்த முதல்வர், அடுத்த MLA, அடுத்த MP என்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் அடிமட்டத் தொண்டனின் வாரிசுகள் இன்னும் மூளைச்சலவையில் அரிவாளுடனேயே சுற்றி வருகிறார்கள். இதுதான் வளர்ச்சியா??
இன்றைய அரசியல் மக்களுக்கா இல்லையா... மக்களை காப்பவன் மட்டுமே தலைவன் என்ற பதவியைப் பெற தகுதி உள்ளவன். தன் மக்களை, தன் இனத்தை தன்னுடைய மேன்மைக்காக அழிவுப்பாதைக்கு அனுப்புவன் தலைவனுக்குரிய தகுதியை இழந்தவனாகிறான்.
சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் செய்த ஒரே சாதனை, மக்களுக்காக உழைத்து தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த நல்ல தலைவர்களுக்கு சாதி சாயம் பூசி, அவர்களை சாதிய தலைவர்களாக மாற்றியதும், சாதிய தீயை பற்ற வைப்பவர்களை அரசியல் தலைவர்களாகவும் மாற்றியதே ஆகும்.
இளைஞர்களுக்கு ஒரே வேண்டுகோள். நல்ல மனிதனை தலைவனாக ஏற்று அவர் கொள்கைகளை பின்பற்றுங்கள். அப்பொழுதுதான் நீங்களும் நாளை நல்ல மனிதராக, தலைவராக உருவாக முடியும்.