நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!
தன்னுயிரில் நம்மை சுமந்து,
இன்னுயிராய் உலகிற்களித்து,
மண்ணிதனில் மனிதனாக,
மறுவடிவம் அதைக் கொடுத்து,
கல்வியோடு நன்னெறியைக்
கற்பாக நமக்களித்து,
செல்வத்தின் பொருளதனை
சிறப்பாக எடுத்துரைத்து,
அநீதிக்கெதிராகப் பொங்கிட
ஆழ்மனதில் விதைத்தவிட்டு,
நம்துணையை எதிர்பார்க்கும்
பெருந்துணையாம் பெண்மையின்
மாதவத்தைப் போற்றுகின்ற
மகத்தான திருநாளாம்...
உயிருள்ள உலகத்தை
உருவாக்கும் பெண்ணவளின்
உன்னதத்தை உணர்ந்தவளை
உயிர்ப்பிக்கும் ஒருநாளாம்...
மாதவத்தில் பிறந்தவளை
மாட்சிமையில் நினைத்திடவே
மகாதேவியராய் நினைத்திங்கு
வணங்குகின்ற பெருநாளாம்...
ஒப்பற்ற தேவியரை
ஒன்பது நாட்களில்
நாம் வணங்கும் திருநாளே
நவராத்திரி பெருநாளாம் ..
மூன்று தேவியருக்கும்
மும்மூன்று நாட்கள்
முறையாய் வழிபடும்
முத்தான திருநாளாம்...
துன்பத்தை போக்கிடும்
துர்க்கையை முதலில் வேண்டி,
செல்வத்திற்கு அதிபதியாம்
திருமகளருள் திருப்பாதமதைத் தேடி,
கல்வியை நமக்கு கருணையோடு அளிக்கும்
கலைவாணி சரஸ்வதியின் சரணங்களை
நாம் தொழுகின்ற நவராத்திரி திருநாளாம்..
அதர்மத்தை அழித்திடும்
வலிமையினை அருளிடவே,
வறியோர் இல்லாத
வல்லமையை வழங்கிடவே
வாழ்விற்கு வளஞ்சேர்க்கும்
வற்றாத நீரூற்றாம்,
கல்வி களஞ்சியத்தை
குறைவின்றி தந்திடவே
முச்செல்வங்களை முறையாய்
குறைவின்றி கொடுத்திடவே, வரங்களதை வேண்டியுன்னை
வணங்கி நாமும் நிற்கின்றோம்
நாட்கள் ஒன்பதிலும்
நாமவளை வணங்குகிறோம்!!!!
நன்மையை நமக்களிக்க
நற்காரியத்தில் துணை நிற்க!!!
ஒன்பது நாள் மட்டுமல்ல,
ஒவ்வொரு நாளிதிலும்,
பெண்ணவளைத் தேவியராய்,
பெருமையுடன் போற்றினாலே,
பெரும்பேறு பெற்றிடுவோம்...
நல்வாழ்வு அடைந்திடுவோம்....
பெண்மைக்கு எதிரான,
பேரரக்க மனதழித்து,
பெண்ணவளின் கனவுகளை,
சிதைத்துத் தடுக்காமல்,
பெருந்துணையாய் நாமிருந்தால்,
நாளும் நமக்கிங்கு,
நவராத்திரி திருநாளே....
இனிய நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துகள்....
வாழ்த்துக்களுடன்,
உங்கள்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்