அகிலம் போற்றும் பாரதம் - மகாபாரதத்தொடர் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அத்தியாயம் 4 சமந்த பஞ்சகம் தோன்றிய கதை
பாரதம் பற்றிய விளக்கத்தினை அளித்த உக்கிரசிரவர், ஆர்வமாய் இருந்த அந்த மகா முனிவர்களுக்கு மகாபாரதக் கதையினைச் சொல்லத் தொடங்கும் முன் அங்கிருந்த முனிவர் ஒருவர் " பௌராணிகரே! நீங்கள் சமந்த பஞ்சகம் சென்று வந்ததாகக் கூறினீர்களே. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள பேராவல் கொண்டுள்ளோம். அதன் வரலாற்றை எங்களுக்குக் கூற இயலுமா? " என்று வேண்டுகோள் வைத்தார்.
" நிச்சயமாகச் சொல்கிறேன். திரேதா யுகத்தையும், துவாபர யுகத்தையும் இணைத்த அவதாரப் புருஷர் பரசுராமர் பற்றி உங்களுக்கு தெரியுமல்லவா?"
"ஓ.. தெரியுமே"
"ஜமத்கனி ரிஷியின் மைந்தர் தானே"
" பகவான் பரசுராமரைத் தெரியாமல் எப்படி?"
பௌராணிகரின் எழுப்பிய வினாவிற்கு முனிவர்கள் ஒரே சமயத்தில் பதிலளித்தனர். அந்த பதிலை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சௌதி மேலும் தொடர்ந்தார்.
" ஆம். சப்தரிஷிகளில் ஏழாவது ரிஷியாக விளங்கும் ஜமத்கனி முனிவரின் புத்திரர் பகவான் பரசுராமர் உருவாக்கியதே இந்த சமந்த பஞ்சகம்".
"பரசுராமர் எவ்வாறு அதை உருவாக்கினார்?. விளக்கமாகக் கூறுங்கள் பௌராணிகரே!."
" நர்மதை ஆற்றங்கரையில் உள்ள மகிஷ்மதியை தலைநகராகக் கொண்டு ஹேஹேய நாட்டினை ஆட்சி செய்தான் கார்த்தவீரிய அர்ச்சுனன். மும்மூர்த்திகளின் அம்சமான தாத்ரேயரின் அருளால் தோன்றிய இவன், அவருக்கு சேவை செய்து பல்வேறு வரங்களைப் பெற்றிருந்தான். ஆயிரம் கரங்களையும், அற்புதத் தேரையும் கொண்டிருந்த கார்த்தவீரியன் மூவுலகிலும் வெற்றிகளைக் குவித்து பேரரசனாக உயர்ந்தான். "
" கார்த்தவீரியன் அர்ச்சுனன், தசவதனன் இராவணனை வென்றவனா??.
" ஆம். முனிவர்களே!. தசவதனனையும் வென்ற பெரும் வீரன் அவன். அப்படிப்பட்ட அம்மாவீரன், வேட்டைக்குச் சென்று திரும்பும் வேளையில், ஜமத்கனியின் ஆஸ்ரமத்திற்கு வந்தான். அவனுக்கும், அவனது படைக்கும் உணவளித்து உபசரித்தார் ஜமத்கனி முனிவர்"
" அவ்வளவு வீரர்களுக்குமா?. அது எப்படி சாத்தியம் ஆயிற்று?"
" ஆம். இதே கேள்விதான் கார்த்தவீரியன் மனதிலும் ஏற்பட்டது. அதை ஜமத்கனி முனிவரிடமே கேட்டான்"
" முனிவர் என்ன பதிலளித்தார்?. எப்படி அவரால் அனைவருக்கும் உணவளிக்க முடிந்தது?"
" ஜமத்கனி முனிவரின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் அளித்த காமதேனு இருந்தது. கேட்டதை அளிக்கும் காமதேனுவால், அனைவருக்கும் உணவளிக்க முடிந்தது. இதை அந்த சப்தரிஷியும் கார்த்தவீரியனிடம் சொல்ல, அங்குதான் எல்லாம் ஆரம்பமானது"
உக்கிரசிரவர் இவ்வாறு சொல்ல" என்ன ஆயிற்று?. என்ன ஆயிற்று" என்று பதற்றத்துடன் வினவினர்.
" கார்த்தவீரியன் காமதேனுவைத் தரும்படி கேட்க, முனிவர் அதை மறுத்தார். உள்ளம் கொண்ட வேட்கையால், இரவோடு இரவாக அந்த தெய்வீகப் பசுவைத் திருடி மகிஷ்மதிக்கு கொண்டு சென்றான்"
" காமதேனுவைத் திருடி விட்டானா?. ரிஷிமுனிவர் அதற்கு என்ன செய்தார். "
"ஜமத்கனி முனிவர் நடந்ததை தன் தவப்புதல்வன் கூற, பரசேந்தி சென்ற ராமன், கார்த்தவீரியன் சிரசேந்தி பசுவை மீட்டு வந்தான்"
" ஆயிரங் கைகளை உடைய அர்ச்சுனனை பரசுராமர் எவ்வாறு வீழ்த்தினார்?"
மற்றொரு முனிவர் உள்ளத்தில் எழுந்த சந்தேகத்தை வினவ, அதற்கும் பதிலளித்தார் பௌராணிகர்.
" கார்த்தவீரியன் ஸ்ரீஹரியால் மட்டுமே மரணிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான். அதனால் பாற்கடல் வாசனின் அவதாரமான பரசுராமரின் கரங்களால் மோட்சமடைந்தான் ."
"தெய்வீகப் பசுவை மீண்டும் கண்ட, ஜமத்கனி முனிவர் என்ன செய்தார்?"
" பசுவைக் கண்டு மகிழ்வடைந்தாலும், அரசனைக் கொன்றது பாவமென்று நினைத்த ஜமத்கனி, பரசுராமரைத் தீர்த்த யாத்திரை செல்லக் கட்டளையிட்டார். "
" அதற்காகத்தான், பரசுராமர் சமந்த பஞ்சகத்தை உருவாக்கினாரா?".
இது மற்றொரு முனிவரின் சந்தேகம். மற்றவர்களும் அதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் உக்கிரசிரவரைப் பார்க்க, அதற்குப் பதிலளித்தார் அந்த புராணங்களை உரைக்கும் பௌராணிகர்.
" இல்லை. பரசுராமர் தீர்த்த யாத்திரை முடித்த வருவதற்குள், கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆஸ்ரமத்திற்குள் புகுந்து ஜமத்கனி முனிவரின் தலையை வெட்டி, மகிஷ்மதிக்கு கொண்டு சென்றனர். இதை அறிந்து கொதித்தெழுந்த பரசுராமர் அரசகுமார்களின் சிரங்களை அறுத்து மலைபோலக் குவித்தார். ஜமத்கனியின் தலையைக் மீட்டு வந்து ஈமச்சடங்குகளை முடித்தாலும், பரசுராமர் நெஞ்சில் எரிந்த கோபம் குறையவில்லை. அதனால் சத்திரிய குலத்திற்கு எதிராகப் போர்தொடுத்து அவர்களை வேரறுத்தார். அவர்களின் சிரங்களைக் கொய்து, பெருகிய குருதி குளங்களாகப் பெருகியது. அதில் ஐந்து தடாகங்களை அமைத்து, அதன் நடுவில் நின்று , தனது பித்ருக்களுக்கு அந்த இரத்தத்தை காணிக்கையாக அளித்தார்."
" அதுதான் சமந்த பஞ்சகமா?.. குருதி நிரம்பிய தடாகங்கள் எப்படி புண்ணிய தீர்த்தங்களாக மாறியது?"
குலபன் சௌனகன் வார்த்தைகள் அங்கிருந்தவர்களின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளிப்பட்டது.
" ஆமாம். தவ முனிவர்களே. அதுதான் சமந்த பஞ்சகம். பரசுராமரின் இரத்த காணிக்கையை ஏற்ற ரிசீகர் முதலான அவரது முன்னோர்கள் தோன்றி, பரசுராமரின் சினத்தைக் குறைத்தனர். கோபம் நீங்கிய பரசுராமர் வேண்டுவதை வரமாக வழங்க அந்த புண்ணிய ஆத்மாக்கள் முன்வந்தனர்"
" அப்படியா. அவர்களிடம், பருசுராமர் என்ன வரம் கேட்டார்?."
" முன்னோர்களின் அன்பான மொழிகளால் சமநிலை அடைந்த பரசுராமர் 'கோபத்தில் ஷத்திரியர்களைக் கொன்றதால் உண்டான பாவம் நீங்க வேண்டும். நான் உருவாக்கிய இந்த தடாகங்கள் புண்ணிய ஸ்தலங்களாகி, இதை அடைபவர்களுக்கு, மோட்சத்தை அளிக்க வேண்டும்' என்று வேண்ட, அவர்களும் அவ்வரத்தினை அளித்தனர். அன்றிலிருந்து, அந்தப் பகுதி சமந்த பஞ்சகமென்ற புண்ணிய பூமியாக போற்றப்படுகிறது "
சமந்த பஞ்சகத்தின் கதையைக் கேட்டவர்கள் உள்ளத்தில் இப்பொழுது அடுத்த கேள்வி உதித்தது.
" அங்குதானே குருசேத்ர யுத்தம் நடந்தது. அவர்களும் நேரடியாகச் சொர்க்கம் சென்றனரா?".
" ஆம். தவஸ்ரீகளே. துவாபரயுகத்தின் இறுதியில் கௌரவர்களும், பாண்டவர்களும் அங்குதான் பெரும் யுத்தத்தைச் செய்தனர். அந்த புண்ணிய பூமியில்தான், பதினெட்டு அக்ஷௌஹிணி படைகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. அதில் வீரமரணம் அடைந்த மாவீரர்களும், மகரதிகளும் சொர்க்கம் சென்றனர்."
அப்போது குறுக்கிட்ட முனிவர் " அக்ஷௌஹிணி சேனை என்று சொன்னீர்கள் அல்லவா?. அதைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள். ஒரு அக்ஷௌஹிணி என்பது எத்தனை எண்ணிக்கை அடங்கியது?. அதில் வீரர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் எத்தனை இருக்கும்.?" என்று ஆர்வமுடன் கேட்டார்.
அவரது கேள்வியை பொறுமையான உள்வாங்கிய உக்கிரசிரவர், அதற்கான பதிலை அவர்களுக்கு தீர்க்கமாக விளக்க ஆரம்பித்தார்.
"தெளிவாகச் சொல்கிறேன். கேளுங்கள். பட்டி என்ற அமைப்பிலிருந்து இந்த எண்ணிக்கை தொடங்குகிறது. "
" பட்டியா?. அது என்ன?"
" ஒரு யானை, ஒரு தேர், மூன்று குதிரைகள், இதனுடன் ஐந்து காலாட்படை வீரர்கள் கொண்ட ஒரு அமைப்பு பட்டி. இதிலிருந்துதான் படைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வரிசைப்படுத்தி கணக்கிடப்படுகிறது. "
" பட்டிக்கு அடுத்து என்ன?. அதைப் பற்றியும் அறிய விரும்புகிறோம்.."
"மூன்று பட்டிகள் சேர்ந்து, படையில் சேனாமுகத்தை உருவாக்குகிறது. அப்படி அமைந்த மூன்று சேனாமுகங்களை குல்மம் என்றழைக்கிறார்கள். மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமென்றும், மூன்று கணங்கள் சேர்ந்தது ஒரு வாஹினியென்றும், மூன்று வாஹினி சேனை சேர்ந்தது ஒரு பிருதனை என்றும் அழைக்கப்படும். மூன்று பிருதனைகள் ஒன்றாகி ஒரு சமுவை அமைக்கின்றன. மூன்று சமுக்கள் சேர்ந்தால், அது ஓர் அனீகினி என்று அழைக்கப்படும். இப்படி படிப்படியாக உயர்ந்த 10 மடங்கு அனீகினி ஒரு அக்ஷௌஹிணி என்ற நிலையை அடைகிறது"
" அப்படியென்றால், அக்ஷௌஹிணி சேனையில் எவ்வளவு வீரர்கள் இருப்பார்கள்??"
" ஒரு அக்ஷௌஹிணி சேனையில் இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது (21,870) யானைகளும், தேர்களும் இருக்கும். அதைப்போல மூன்று மடங்கு குதிரைகளும், ஐந்து மடங்கு காலாட்படை வீரர்களும் அதில் அடங்குவர். அதாவது
அறுபத்தைந்தாயிரத்து அறுநூற்று பத்து (65,610) குதிரைகளும், நூற்றொன்பது ஆயிரத்து முன்னூற்று ஐம்பது (109,350) காலாட்படை வீரர்களும் இருப்பர். இதுவே ஒரு அக்ஷௌஹிணி சேனை. "
" எத்தனை பெரிய படை!எவ்வளவு பெரிய போர்!! மனதில் எண்ணும்போதே பெரும் வியப்பாக இருக்கிறதே!!!!."
" இப்படி வரிசைப்படுத்தப்பட்ட 11 அக்ஷௌஹிணி சேனைகள் கௌரவர்களுக்காகவும், 7 அக்ஷௌஹிணி சேனைகள் பாண்டவர்களுக்காகவும் போரிட்டன. த்ருஷ்டத்யும்னன் தலைமையில் களமிறங்கிய பாண்டவர் சேனையை எதிர்த்து, பிதாமகர் பீஷ்மர் முதல் பத்து நாட்கள் போரிட்டு, அம்பு படுக்கையில் சாய்ந்தார். அடுத்த ஐந்து நாட்களுக்கு அம்மாபெரும் சேனையை துரோணர் வழிநடத்தினார். அவருக்குப் பிறகு, சூர்ய புத்திரன் கர்ணன் கௌரவப் படைக்கு தலைமையேற்று, இரண்டு நாட்கள் போரிட்டான். அதன்பிறகு சேனாதிபதியான சல்லியன், கடைசி நாளில் பாதிநாள் வரை போரிட்டு வீழ்ந்தான். அன்றைய நாளின் இறுதி வரை நடந்த கதாயுத்தத்தில் பீமன், துரியோதனனை வீழ்த்தினான். முடிவில் பொறுப்பேற்ற அஸ்வத்தாமன் கிருபரோடு இணைந்து, பாண்டவர்கள், கிருஷ்ணர் மற்றும் சாத்யகி நீங்கலாக, தூக்கத்தில் இருந்த மொத்த படையையும் அழித்தனர்."
அக்ஷௌஹிணி சேனைகளின் எண்ணிக்கையை உக்கிரசேனர் விளக்க, அதன் பிரமாண்டத்தை எண்ணியவர்கள் மனது பிரமிப்பில் மூழ்கியது. சத்திர வேள்வியை நிறைவு செய்து, ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்றிருந்த அந்த வேதியர்களுக்கும் அது வியப்பாய் இருந்தது
" பௌராணிகரே! மாபெரும் இக்காவியம் பல பாகங்களாக பர்வங்களாகப் பகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினீர்கள். அதைப் பற்றி விளக்க இயலுமா?. அதில் ஒவ்வொரு பர்வத்திலும் சொல்லப்பட்டுள்ள கதைகளை சுருக்கமாக கூற இயலுமா?"
" நிச்சயமாக. கூறுகிறேன். வேதங்களை அறிந்த உங்களுக்கு, இந்த கதையின் சாரத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்"
மகாபரதப் பர்வங்கள் பற்றி அறிய விரும்பிய அந்த வேதியர்களுக்கு, மிகப்பெரும் தேனடையிலிருந்து எடுத்து சிறு தேன்துளி போன்று ஒவ்வொரு பர்வத்தையும் அவர்களுக்கு வழங்கினார் உக்கிரசிரவர்.
- தொடரும்