அகிலம் போற்றும் பாரதம் - மகாபாரதத்தொடர் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அத்தியாயம் : 3 வியாசரின் பாரதமும், விநாயகரின் நிபந்தனையும்
நைமிசவனத்தில் சத்திர வேள்வியை நிறைவு செய்து, மஹா விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்ற தவ முனிவர்களுக்கு, உக்கிரசிரவர் உலகம் தோன்றிய கதையை எடுத்துரைத்தார். அதனை நிறைவு செய்த வேளையில் " பாரதக் கதையை வியாசர் எவ்வாறு எழுதினார்?" என்று குலபதி சௌனகர் கேட்டார்.
" மகாமுனிவரான பராசரருக்கும், சத்தியவதிக்கும் மகனாகத் தோன்றிய துவைபாயன வியாசர் வேதங்களை வகுத்த பிறகு, மகாபாரத காவியத்தை இயற்ற ஆரம்பித்தார். அதைத் தொடரும் வேளையில், அவர் மனதில் ஒரு பெரும் ஐயம் உருவெடுக்குத் தொடங்கியது."
வியாசரின் மனதில் ஐயம் எழுந்ததாகச் பௌராணிகர் சொல்ல, அங்கிருந்தவர்களுக்கு பெரும் வியப்பை உண்டாக்கியது.
" என்ன ஐயம்?. வேதங்களையே வகுத்த கல்விமானான அந்த தவஸ்ரீக்கே ஐயமா? பெரும் வியப்பாய் இருக்கிறதே"
" ஆம். முனிவர்களே. உண்மைதான். தான் இயற்றும் அந்த காவியத்தை தனது சீடர்களுக்கு எவ்வாறு எடுத்துரைப்பது.? என்பதுதான் அந்த ஐயம்"
இதைக்கேட்ட பிறகு, முனிவர்களின் முகத்தில் இருந்து வியப்பு நீங்கி, அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
" உசிதமான ஒன்றுதான். பிறகு எப்படி அந்த ஐயம் நீங்கியது"
" மனதில் எழுந்த ஐயத்தால் பாரத காவியத்தை இயற்றும் மனநிலையில் தேக்கம் ஏற்பட, அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனை அறிந்த பிரம்ம தேவன், வியாசருக்கு காட்சியளித்தார்."
" பிரம்மதேவரே நேரில் தோன்றினாரா? பிறகு என்ன நடந்தது?"
அவ்வாறு கேட்ட முனிவர்களுக்கு பிரம்மதேவருக்கும் வியாசருக்கும் நடந்த உரையாடலை உக்கிரசிரவர் விவரிக்கத் தொடங்கினார்.
வியாசரின் ஐயத்தை நீக்க விரும்பி நேரில் தோன்றிய பிரம்மனை வணங்கி அவரது பாதங்களுக்கு அருகில் அமர்ந்தார்.
அவரை நோக்கிய பிரம்மன் " உமது ஐயம் என்ன?. அதைத் தீர்க்கவே யாம் வந்துள்ளோம்" என்று ஆறுதல் மொழிந்தார்.
அதைக் கேட்ட வியாசரின் மனம் தன் சங்கடம் தீர்ந்ததாக எண்ணி மகிழ்ந்தது.
" ஐயனே! நான் மிகப்பெரும் காவியமொன்றை இயற்றி இருக்கிறேன்.
அதில் வேதங்களையும், அதன் உட்பொருளையும் விளக்கியுள்ளேன். முக்காலங்களிலும் இயற்றப்பட்ட புராணங்கள், சிருஷ்டியின் தோன்றல் என
இந்த உலகில் உள்ள அனைத்துக் கூறுகளையும் விவரித்து இயற்றி உள்ளேன். ஆனால், அதை எழுதுவதற்கு சரியான எழுத்தர் என் சிந்தைக்குத் தோன்றவில்லை. அந்தக் குறையை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும் "
இதைக் கேட்டுப் புன்னகைத்த பிரம்மதேவர் " புனிதமான இம்முனிவர்களில் உயர்வானவனே!. நீ இயற்றும் இக்காவியத்திற்கு இணையான ஒன்று எக்காலத்திலும் தோன்றப்போவதில்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மகா காவியத்தை எழுதிட, ஞானத்தில் சிறந்த கணபதியை எண்ணித் தொழுவாயாக!. வினைகள் தீர்க்கும் விநாயகனால் உன் மனக்குறையும் நீங்கும். "
வியாசரின் ஐயத்தை நீக்கும் வழியை உரைத்த பிரம்மன் மறைந்தார். பிரம்மதேவரின் இந்த ஆலோசனையால் உள்ளம் மகிழ்ந்த வியாசர், அவரை வணங்கிப் போற்றினார். இக்கதையை பௌராணிகரின் வழியாகக் கேட்ட நைமிசவன முனிவர்கள் பேரானந்தம் கொண்டனர்.
"என்ன அற்புதம்!!!. பாரதம் எழுத விக்னேஷ்வரனின் பெயரை பிரம்ம தேவரே உரைத்தாரா?. " என்று அவர்களுக்குள் சலசலப்புடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட உக்கிரசிரவர் கதையைத் தொடர்ந்து அவர்களுக்கு விவரித்தார்.
பிரம்மன் அருளிய ஆலோசனையை ஏற்ற வியாசர், மங்கலம் தரும் மகா கணபதியை மனதில் வேண்டி நின்றார். தன் பக்தர்களின் நற்காரியங்களுக்குத் தடையேற்பட்டால் அதை உடைத்து அருள் மழை பொழியும் ஆனைமுகத்தான், வியாசரின் வேண்டுதலுக்கு மனமிரங்கி காட்சி அளித்தார்.
தன் கண்முன் தோன்றிய விநாயகப் பெருமானை வணங்கிய வியாசர் " கணங்களின் நாயகனே!!. கணபதியே!!. நான் சொல்லும் பாரத காவியத்தை எழுதும் பணியை ஏற்பாயாக!!" என்று வேண்டி பாதம் பணிந்தார்.
வியாசரின் அன்பான கோரிக்கையை கேட்ட விநாயகர், "என் எழுத்தாணி ஒரு கணமும் நிற்காமல், இடைவிடாது நீர் உரைத்தால், நான் உமது படைப்பை எழுத சம்மதிக்கிறேன்" என்ற நிபந்தனை விதித்தார்.
ஞானத்தில் சிறந்த கணபதியின் நிபந்தனையைப் பற்றிச் சிறிது சிந்தித்த வியாசர் " நான் சொல்லும் செய்யுள் புரியாத போது எழுதுவதை நிறுத்த வேண்டும். அதன் முழுப்பொருளை உணர்ந்த பிறகே எழுத வேண்டும் " என்று பதிலுக்கு நிபந்தனை விதித்தார்.
இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு மகாபாரதக் காவியம் எழுதும் படலம் தொடங்கியது. வியாசர் ஸ்லோகங்களைச் சொல்ல சொல்ல, விநாயகர் பாரதக் கதையினை எழுதத் தொடங்கிய கதையையும் தவ முனிவர்களுக்கு விவரித்தார் உக்கிரசிரவர்.
அப்பொழுது முனிவர் ஒருவர் " அதெப்படி, ஞானத்தின் கடவுளான கணபதிக்கு பொருள் புரியாமல் இருக்கும்" என்ற தனது சந்தேகத்தைக் கேட்டார்.
" வியாசர் தனக்கு அடுத்த செய்யுளை இயற்ற நேரம் தேவைப்படும் போது, அதிகப் புதிர்த்தன்மையுடன் கடினமான ஸ்லோகங்களைக் கூறினார். அதன் பொருளுணர கணபதி தாமதிக்கும் வேளையில், அடுத்தடுத்த செய்யுளை இயற்றினார் வியாசர் "
" ஆஹா.. அற்புதம்.. மொத்தம் எத்தனை ஸ்லோகங்களை வியாசர் இயற்றினார்?. அதைப் பற்றி கூறுங்கள் பௌராணிகரே?".
" வேதவியாசர் முதலில் 24,000 ஸ்லோகங்களைக் கொண்ட பாரதத்தை இயற்றினார். அதன் பிறகு 150 சுலோகங்களைக் கொண்ட சுருக்கமான அனுக்கிரமாணிகம் என்பதை இயற்றி, தனது மகன் சுகருக்குப் போதித்தார். அதையே தனது தகுதியான சீடர்களுக்கும் வியாசர் போதித்தார். பிறகு அறுபது நூறாயிரம் (60 லட்சம்) ஸ்லோகங்களைக் கொண்ட மிகப்பெரும் பாரதத் தொகுப்பை இயற்றினார் "
இதைக் கேட்ட அம்முனிவர்கள் பெரும் வியப்படைந்தனர். பெரும் பிரமிப்பில் இருந்த அவர்கள் " 60 நூறாயிரம் ஸ்லோகங்களா?. அவற்றை எல்லாம் நீங்கள் அறிவீர்களா? " என்று பிரமிப்புடன் கேட்டனர்.
"கூறுகிறேன். கேளுங்கள். அதில் முப்பது நூறாயிரத்தை (30 லட்சம்) நாரதர் உரைக்க, தேவர்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினைந்து நூறாயிரத்தை (15 லட்சம்) தேவலர்கள் உரைக்க பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினான்கு நூறாயிரத்தை (14 லட்சம்) கந்தர்வர்கள் மற்றும் யட்சர்களின் உலகத்திற்கு , வியாசரின் மகனான சுகர் போதித்துள்ளார். ஏனைய ஒரு நூறாயிரம் (1 லட்சம்) மட்டுமே மனிதர்கள் அறிய கிடைத்திருக்கிறது. அதைத்தான் நான் உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன் "
இதைக் கேட்ட தவ வாழ்வில் சிறந்த அம்முனிவர்கள் உற்சாகமடைந்தனர்.
" ஆஹா. அற்புதம். அதைக் கேட்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்" என பெரும் மகிழ்வுடன் அவர்கள் கூற" அந்த புண்ணிய காவியத்தில் எதைப்பற்றி எல்லாம் வியாசர் விவரித்துள்ளார்?" என்றார் குலபதி சௌனகர்.
" இருள் நிறைந்த இரவுப் பொழுதினைப் பரிதியின் கதிர்கள் அகற்றி ஒளிதருகின்றது. அதைப்போல இக்காவியைத்தை அறிவதால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நால்வகை மனித வாழ்வில் உண்டாகும் இருள் சூழ்ந்த அறியாமை உள்ளத்தில் இருந்து அகன்றுவிடும். முழுமதியின் ஒளிபட்டு விரிவடையும் ஆம்பலின் இதழ்களாக, இதை உணர்வோர் உள்ளத்தில் அறிவொளி மலர்கிறது. "
" மிக அற்புதமான விளக்கம். அந்த மாபெரும் காவியத்தின் உள்ளடக்கம் பற்றி கூற இயலுமா?."
" நிச்சயமாக.. அனுக்கிரமணிகத்தை விதையாகக் கொண்ட மகாபாரதம் என்னும் இக்காவியம், ஒரு பெரும் விருட்சமாகும். ஆத்ய பஞ்சகம், யுத்த பஞ்சகம், சாந்தி ஸ்திரையம், அந்த்ய பஞ்சகம் ஆகியவை இவ்விருட்சத்தின் பெரும் பகுதிகளாகும். அவை பதினெட்டு பர்வங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "
" ஆத்ய பஞ்சகம் என்றால் என்ன?. விளக்கமாகக் கூறுங்கள் பௌராணிகரே!!."
" பாரதக் கதையின் ஆரம்பத்தை விளக்கும் பகுதி ஆத்ய பஞ்சகம். இதில் ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராட பர்வம் மற்றும் உத்தியோக பர்வக் காட்சிகள் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பௌசியம், பௌலோமம் மற்றும் ஆஸ்தீகம் உபபர்வங்கள் வேராகத் தாங்கி நிற்க, சம்பவ பர்வம் தண்டுப் பகுதியாக விரிந்து நிற்க, சபா பர்வமும் ஆரண்ய பர்வமும் அதிலிருந்து தோன்றி வளர்ந்து நிற்கும் கிளைகளாகும். வன பர்வம் புதிர்கள் நிறைந்த பகுதியாகும். பெரும் விருட்சத்தின் நடுப்பகுதியான விராடம் மற்றும் உத்யோக பர்வத்தை தாண்டினால், கிளைகளை அடையலாம். "
அதைக் கேட்டுக்கொண்டிருந்த முனிவர் ஒருவர் "அப்படியெனில், யுத்த பஞ்சகம் என்றால் குருசேத்ர யுத்தத்தைப் பற்றிய விவரிப்புகளா?" என்று வினவ " ஆம். சரியாகச் சொன்னீர்கள் " என்று ஆமோதித்த உக்கிரசிரவர் விளக்கத்தை தொடர்ந்தார்.
" பீஷ்ம பர்வம் விருட்சத்தின் கிளைகளாகவும், துரோண பர்வம் அதன் இலைகளாகவும், கர்ண பர்வம் அதில் மலர்ந்த மலராகவும் இருக்க, சல்லிய மற்றும் சௌப்திக பர்வங்கள் மணம் வீசுகின்றன. இந்த ஐந்து பர்வங்களை யுத்த பஞ்சகம் விவரிக்கிறது. "
" சாந்தி த்ரையம் எத்தகைய பகுதி?. அதில் என்ன கூறப்பட்டுள்ளது "
"யுத்தத்திற்கு பிறகு அமைதி உருவான விதத்தை விவரிக்கும் சாந்தி த்ரையத்தில், ஸ்திரீ பர்வம் பாரத விருட்சத்தின் புத்துணர்ச்சி அளிக்கும் நிழலாகும். அவ்விருட்சத்தின் கனியே சாந்தி பர்வமாகும். அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை விளக்குவது அனுசாசன பர்வமாகும். "
"அந்த்ய பஞ்சகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது, பௌராணிகரே ?
" அந்த்ய பஞ்சகம் அவ்விருட்சத்தின் பலனைத் தரும் பகுதியாகும். இந்தப் பகுதியில் இறுதி ஐந்து பர்வங்கள் விவரிக்கபட்டுள்ளன. அமிர்தத்திற்கு ஒப்பான பழரசம் போன்ற அஸ்வமேதிகா பர்வம் படிப்பவர்க்கு அழிவில்லா மேன்மையை வழங்கும். வேதங்களை உள்ளடக்கியது மௌசலப் பர்வமாகும். இப்படி சிறப்பு வாய்ந்த புண்ணியக் கதையினை உங்களுக்கு நான் விளக்கப் போகிறேன். "
உக்கிரசிரவர் பாரதக் கதையினை சொல்லத் தொடங்கும் வேளையில் எழுந்த முனிவர், அவரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.
_ தொடரும்