அகிலம் போற்றும் பாரதம் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அத்தியாயம் : 2 உலகம் தோன்றிய கதை
பாஞ்சசன்யம் என்ற பெயர் கொண்ட சங்கு மற்றும் சுதர்சன சக்கரத்தை கரங்களில் ஏந்தி, திருப்பாற்க்கடலில் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணுவே, ஆரண்யமாய் காட்சியளிக்கும் நைமிசாரண்யத்தில் சத்திர வேள்வியை நிறைவு செய்து அமர்ந்திருந்த குலபதி சௌனகருக்கும், அவருடன் இருந்த மற்ற முனிவர்களுக்கும் வேத வியாசர் உரைத்த பாரத காவியத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
" அனைத்திற்கும் முதலானவனும், பெரும் சிறப்புகளுக்கு உரியவனும், இவ்வுலகில் அழிவில்லாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பவனுமான அந்த ஸ்ரீஹரியினை வணங்கி உங்களுக்கு இந்த காவியத்தை உரைக்கிறேன். சத்தியவதியின் மகனான கிருஷ்ண துவைபாயனர் என்ற வியாசர் மகான், தன்னுடைய அரிய தவவலிமையால் வேதங்களை வகுத்த பிறகு, இக்காவியத்தை படைக்க விரும்பினார். அதனால் யோக நிலைக்கு சென்று தன்னுடைய ஞானசக்தியால் நடந்த அனைத்தையும் அறிந்தார். "
உக்கிரசிரவர் இவ்வாறு கூறியதும், அங்கிருந்த தவசிகளில் ஒருவர் " யோக சக்தியால் வேத வியாசர் எதுவரை சென்றார் " என்று வினவினார். அவரது சந்தேகத்தைப் பொறுமையுடன் கேட்ட பௌராணிகர் மேலும் தொடர்ந்தார்.
" யோக வலிமையின் காரணமாக, முதலில் உலகம் தோன்றிய காலத்திற்கு சென்று, அது எவ்வாறு உருவானது என்பதை அறிந்து கொண்டார்."
" அப்படியா.. உலகம் தோன்றிய கணத்திற்குச் சென்றாரா?. அது எப்படி சாத்தியமாயிற்று?. அங்கு என்ன இருந்தது?"
"ஆம். அவரது யோக பலம் மற்றும் தவ வலிமையின் பலனால் அவரால் உலகம் உருவான காலத்திற்கு செல்ல முடிந்தது. அங்கு அவரது ஞானத்தில் இருள் சூழ்ந்து ஒளியற்ற ஒரு இடம் தெரிந்தது. அந்த இடத்தில் மஹாதிவ்யம் என்றழைக்கப்படும் மிகப்பெரிய முட்டை இருந்தது.அது உடைந்து அதிலிருந்து"
உக்கிரசிரவர் இவ்வாறு சொல்ல சொல்ல, அங்கிருந்த தவமுனிவர்கள் பிரமிப்பில் மூழ்கினர். அதைக் தங்கள் கற்பனைத் திறத்தால் சிந்தித்து, சிந்தையில் உருக்கொடுத்து கண்டு மகிழ்ந்தனர். அவ்வப்போது தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை அவரிடம் கேட்க, கதை தொடர்ந்தது.
" முட்டையா.?. அதற்குள் என்ன இருந்தது.?
"
" ஆம். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற பிரம்மத்தின் உண்மை ஒளியைக் கொண்ட அந்த மஹாதிவ்யம் என்ற முட்டை உடைந்தது. உடைந்த அம்முட்டையிலிருந்து, உலகின் முதல் பிரஜாபதியான பிரம்மதேவன் முதலில் தோன்றினார். அவரைத் தொடர்ந்து அசுரகுரு சுக்யாச்சாரியாரும் மற்றும் ஸ்தானுவும் வெளிவந்தனர். மனு, வஷிஷ்டர், பரமேஷ்டி, பத்துப் பிரசேதர்கள், தக்ஷன் , அவனது ஏழு மகன்கள் என இருபத்தோரு பிராஜாபதிகள் அம்முட்டையிலிருந்து ஒவ்வொருவராக அவதரித்தனர். "
புராணங்களை எடுத்துரைப்பதில் சிறந்த பௌராணிகரான உக்கிரசிரவர் தனக்கே உரித்தான வகையில், சிருஷ்டி தோன்றியதை விவரிக்க, சௌனகர் உட்பட அங்கிருந்த முனிவர்கள் ஆர்வமுடன் அதைக் கேட்டனர். படைப்பின் அந்தப் பெருங்கதையை சௌதி, மேலும் தொடர்ந்து அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.
" அவர்களைத் தொடர்ந்து விராட புருஷனான மனிதன் அவதரித்தான். மஹாதிவ்யம் என்னும் அந்த முட்டையிலிருந்து , முன்னர் தோன்றிய உயர் ஆத்மாக்களைப் போலவே விஸ்வதேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி இரட்டையர்கள், யட்சர்கள், சத்யஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள்,பித்ருக்கள் என வரிசையாய் தோன்றி சிருஷ்டியை அலங்கரித்தனர்"
" பஞ்ச பூதங்கள் எவ்வாறு தோன்றியது " என்று மற்றொருவர் தன்னுடைய ஐயத்தைக் கேட்க, புன்னகையுடன் மறுமொழியைத் தொடர்ந்தார்.
" புனிதமான பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும் படைக்கப்பட்ட பிறகு, பூமி, சொர்க்கம், நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகியவை படைக்கப்பட்டன. அதன் பிறகு மனித குலத்தை இயக்கும் இரவு, பகல், காலங்கள், மாதங்கள், வருடங்கள், பிறைநாட்கள் என அனைத்தும் ஒவ்வொன்றாய் இங்கு படைக்கப்பட்டன. "
" அப்போது படைக்கப்பட்ட பொருட்கள் இப்பொழுதும் இருக்கிறதா?".
" இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும், ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அழிந்தோ, திரிந்தோ வேறொரு வடிவினை அடைகின்றன. ஒரு யுகம் முடிந்ததும் அடுத்த யுகத்தின் பலனுக்கேற்ப, படைக்கப்பட்ட பொருட்கள் புணரமைக்கப்படுகின்றன. அப்போது படைக்கப்பட்ட உலகம் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகியவற்றைக் கடந்து கலியுகத்திற்கு வந்தாலும்,
உலகில் பேரழிவை உண்டாக்கும் காலச்சக்கரம் தொடக்கம் முடிவின்றி சுழன்று, இவ்வுலகை சுழல வைக்கிறது. "
முதலில் உலகம் உருவான கதையினை தவ முனிவர்களுக்கு எடுத்துரைத்த பௌராணிகர், அவர்களின் முக உணர்வுகளை நோக்கினார். இதையெல்லாம் கேட்டுப் பரவசமடைந்த குலபதி சௌனகர் எழுந்து " உலகம் தோன்றிய கதையினை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தீர்கள். அதன் பிறகு நடந்தவற்றையும் எங்களுக்கு கூறுங்கள் "
என்று வேண்டினார். அவரது கோரிக்கையை ஏற்ற உக்கிரசிரவர் அக்கதையைத் தொடர்ந்தார்.
" இவ்வலகில் முக்கியமானவர்களாகப் போற்றப்படுபவர்கள் முப்பத்து முக்கோடித் தேவர்கள். அவர்களின் தலைமுறை
முப்பத்து மூன்று ஆயிரங்களும், முப்பத்துமூன்று நூறுகளும், முப்பத்துமூன்று ஒன்றுகளும் உடையது. அந்தத் தேவர்களின் வாரிசாகத் தோன்றிய திவ். "
" ஓ... அவரின் வாரிசுகள் யார்?"
" திவ் தனக்குத் தோன்றிய வாரிசுளுக்கு ப்ருஹத்பானு, சக்ஷூஸ், ஆத்மா, விபாவசு, சவிதா, ரிசீகன், அர்க்கன், பானு, ஆசாவஹன், ரவி எனப் பெயர் வைத்தான்.
இந்த விவஸ்வான்களின் வழியில் அவதரித்த மஹ்யனின் மகனாக தேவவிரதன் பிறந்தான். அவனது மகனான சுவவிரதனுக்கு தசஜோதி, சதஜோதி, சஹஸ்ரஜோதி என்று மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு பல்வேறு மக்களைப் பெற்றெடுத்தனர்."
"அடுத்து என்னவாயிற்று, பௌராணிகரே?".
" அந்த வழியில் தோன்றிய தசஜோதிக்குப் பத்தாயிரம் மக்களும், சதஜோதிக்கு அதைவிடப் பத்து மடங்கான லட்சம் மக்களும், சஹஸ்ரஜோதிக்கு அதைவிடப் பத்துமடங்கான பத்து லட்சம் மக்களும் தோன்றினர்."
" இவர்களின் வாரிசுகள் யார் யார்?
"இவர்களின் வாரிசாக குருக்கள், யதுக்கள், பாரதர்கள், யயாதியின் குடும்பத்தினர் மற்றும் இக்ஷவாகுவின் குடும்பத்தினர் என பலரும் இம்மண்ணில் தோன்ற, அவர்களுடன் மற்ற உயிர்களும் பிறந்து பல்கிப் பெருகி உலகெங்கும் பரவியது"
" வேதங்களை வகுத்த வியாசர் படைத்த பாரத காவியத்தில் வேறென்ன சொல்லப்பட்டுள்ளது"
" வேதம், யோகம், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என மனத குலத்திற்குத் தேவையான அனைத்தும் வியாசர் இம்மகாகாவியத்தில் எடுத்துரைத்துள்ளார். அவற்றை சுருக்கமாகவும், விவரித்தும் இரு வடிவங்களில் தந்துள்ளார் அந்த மகரிஷி. அவரவர்தேவைக்கும், அறிவுத்திறனுக்கும் ஏற்றவாறு அதைப் பருகலாம். மற்றவர்களின் தாகத்தையும் தீர்த்து, புண்ணியம் பெறலாம். தன்னுடைய ஆத்ம பலம் மற்றும் தியான பலத்தினால் வேதங்களை ஆய்வு செய்து இந்த அரும் காவியத்தை நமக்கு அருளியுள்ளார் வேத வியாசர்."
வேத வியாசர் தனது யோகநிலைக்குச் சென்று, உலகம் தோன்றியதைக் கண்டு,எடுத்துரைத்த கதையை, மனக்கண் முன் தோன்றும் வகையில் உக்கிரசிரவர் மொழியக் கேட்ட தவ முனிவர்கள் பெரும் பிரமிப்பில் இருந்தனர்.
_ தொடரும்