Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அகிலம் போற்றும் பாரதம் அத்தியாயம் 1 : சத்திர வேள்வியும், நைமிசாரண்யமும்

Copied!
Kavignar Vijayanethran

அகிலம் போற்றும் பாரதம் 

அத்தியாயம் 1 : சத்திர வேள்வியும், நைமிசாரண்யமும்  

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனம், ஓங்கி வளர்ந்த மரங்களுடன் பச்சை பட்டாடை உடுத்தியது போல் பசுமையாய்க் காட்சியளித்தது. நைமிச வனம் என்றழைக்கப்படும் அந்தப் பெரும் வனத்திற்கு குளிர்ச்சியையும், பசுமையையும் வழங்கும் கோமுகி நதி, அதன் நடுவே தனிப்பாதை அமைத்து நீண்டு வளைந்து எழிலுடன் ஓடிக்கொண்டிருந்தது. அகிலத்தின் இருளை நீக்க உதித்தெழுந்த பரிதியின் இளம் கதிர்கள் பூமியைத் தீண்டும் காலை வேளையில், கோமுகி நதியில் தன் கால்களை நனைத்து நீராடிக் கதிரவனை வணங்கிக் கொண்டிருந்தார் உக்கிரசிரவன். லோமஹர்ஷணரின் மகனான அந்த சௌதி  உச்சரித்த மந்திரங்களின் எதிரொலியால் புண்ணியம் நிறைந்த அந்த இடம், மேலும் புனிதம் அடைந்து கொண்டிருந்தது. தனது காலை வழிபாட்டை முடித்துக் கொண்டு, கோமுகி நதியைக் கடந்து சென்ற  உக்கிரசிரவர் ஆற்றின் மறுகரைக்கு வந்தடைந்தார். நைமிச வனத்தின் புனிதத்தை உணர்ந்திருந்த அவரது மனம் குறிப்பிட்ட அந்த இடத்தை நோக்கி கால்களைச் செல்லப் பணித்தது. ஆழ்மனதின் விருப்பத்தை ஏற்ற அந்த மகரிஷி, புனிதமான அந்த இடத்தை நோக்கி பயணம் செய்து அவ்விடத்தை அடைந்தார்.

அங்கு தவவலிமையில் சிறந்த முனிவர்கள் பலர் ஒன்றிணைந்து தவவேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, வேள்வி செய்து அமர்ந்திருந்த அந்த பெரும் முனிவர்களைக் கண்டதும் உக்கிரசிரவரின் மனம் பெரும் மகிழ்வை எட்டியது. அவ்வேளையில் அங்கு வீசிய இளங்காற்று பூக்களின் நறுமணங்களை பரப்பியது. புனிதமான அந்த இடத்தின் நற்சகுணங்கள் அதிகமாகத் தென்பட்டன. அதே வேளையில் அங்கிருந்தவர்கள், தங்கள் இருப்பிடத்தை நோக்கி முனிவர் ஒருவர்  வருவதைக் கண்டனர். உக்கிரசிரவனின் முகத்தில் இருந்த பொலிவும், அவரது வருகையால் அவ்விடத்தில் உண்டான நேர்மறை உணர்வும் அவர் இறையருளைப் பெற்றவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தியதால், சௌதி என்றழைக்கப்படும் அந்த தவசீலரை வரவேற்க ஆயத்தமானார்கள்.‌ அப்பெரும் முனிவரைக் கண்டு அவரை வரவேற்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று வணங்கினர்.

" வாருங்கள் முனிவரே... தங்கள் வரவால் இவ்விடத்தின் புனிதம் மேலும் புனிதமைடையட்டும்" 

" உங்களின் அன்பான வரவேற்பால்,மனம் மகிழ்ந்தேன்" 

"வாருங்கள்.. இங்கு அமருங்கள்..." 

தங்களின் ஆஸ்ரமத்திற்கு வந்த முனிவரை அழைத்து மரியாதையுடன் அமர வைத்த பின், மற்றவர்களும் அவ்விடத்தில் அமர்ந்தனர். அந்த இடத்தின் அமைதியும் அழகும் உக்கிரசிரவருக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. 

" இவ்விடத்தின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது. மனதிற்கு பெரும் உற்சாகத்தை தருகிறது." 

" ஆமாம். மகரிஷியே. இவ்விடம் வேள்விகள் செய்வதற்கும், தவமியற்றி நோன்புகளைச் செய்வதற்கும் மிகச் சரியான இடம்."

" ஆமாம்.. ஆமாம்.. இவ்விடத்தில்  உங்களின் தவ வாழ்க்கை எவ்வாறு உள்ளது. இங்கு வீசும் பெரும் சுகந்தத்தின் ஸ்பரிசத்தை உணரும் போதே,  ஏதோ பெரிய வேள்வி நடந்திருப்பதாகத் தோன்றுகிறதே?"

உக்கிரசிரவரின் தனது மனதில் உணர்ந்த விடயத்தை அவர்களிடம் வினாவாய்த் தொடுக்க, அங்கிருந்த முனிவரொருவர் அவ்விடத்தைப் பற்றி விளக்கினார்.

" ஆம். முனிவரே!. உங்களின் சந்தேகம் சரியானதுதான். சௌனகரான நான், குலபதி என்னும் குடும்பப் பெயரை உடையவன். தவவலிமையில் சிறந்த இந்த மகா முனிவர்களுடன் இணைந்து சத்ர வேள்வியை செய்திட எண்ணினேன் "

சௌனகரின் பதில் சௌதியை பரவசமடையச் செய்தது. அந்த பிரமிப்பில் " சத்திர வேள்வியா??." என்று அவரிடம் வினவினார். 

" ஆம்.. முனிவரே... சத்திரவேள்வி தான்" 

" அப்படியா.. மிக நல்லது. ஆனால் அது மிகக் கடினமான வேள்வியாயிற்றே?"

" உண்மைதான். உலக நன்மைக்காக அதைச் செய்வது என்று முடிவெடுத்தோம். அந்த பாற்கடல் வாசனின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. "

" அகிலத்தின் நன்மைக்காக அரும்பெரும் காரியத்தை ஆற்றியுள்ளீர்கள்.  ஆனால், நீங்கள் எப்படி அதை வெற்றிகரமாகச் செய்தீர்கள்.  புண்ணியம் சேர்க்கும் அந்த பெரும் யாகத்திற்கு, புனிதமான இவ்விடத்தை எப்படி தேர்வு செய்தீர்கள்.‌"

உக்கிரசிரவரின் மனதில் பெரும் மகிழ்வும், ஆச்சர்யமும் ஒன்றாகக் கலந்து வினாவாக வெளிப்பட்டது. அவரது வினாவைப் பொறுமையாகக் கேட்ட குலபதி சௌனகர் பதிலைத் தொடர்ந்தார்.‌

" நாங்கள் எல்லாம் ஒன்றுகூடி வேள்வி செய்ய முடிவெடுத்த பிறகு, அதை எங்கு செய்வது என்ற குழப்பம் எங்களுக்குத் தோன்றியது. அதற்கேற்ற சரியான இடம் எது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. அதனால்" 

"அதனால்... என்ன ஆயிற்று. இந்த இடத்தை எப்படிக் கண்டறிந்தீர்கள்"  

தவசீலராய் இருந்தாலும் அந்த அற்புதத்தை அறிந்து கொள்ளும் ஆவலில், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பேராவலுடன் வினவினார் உக்கிரசிரவர்.

" அதை பிரம்மதேவரிடமே கேட்டு விடலாம் என்று  முடிவெடுத்து அவரை வேண்டி நின்றோம்." 

" நல்ல முடிவு. அவர்தான் இந்த இடத்தை தேர்வு செய்தாரா?" 

" ஆம். ஆனால் அவர் நேரடியாக இவ்விடத்தை தேர்வு செய்யவில்லை."

" நேரடியாக இல்லையா?. பிறகெப்படி?" 

குலபதி சௌனகரின் ஒவ்வொரு பதிலும் அவருக்கு பெரும் பிரமிப்பை உண்டாக்கியது. அதனால் பெருக்கிட்ட ஆவல், அதை அறிந்து கொள்ள மனதை உந்த, அடுத்தடுத்து உற்சாகமாக வினாக்களைத் தொடுத்தார்.‌ சௌனகரின் உள்ளத்தில் அன்று நடந்தவை மனக்கண்ணில் தோன்ற, அதைப் விளக்கமாக உக்கிரசிரவருக்கு எடுத்துரைத்தார்.

" நாங்கள் சத்திரவேள்விக்கான இடத்தை தேர்வு செய்து தருமாறு பிரம்ம தேவரிடம் வேண்டி நின்றோம். அவரும் தர்ப்பை புல் ஒன்றை வளையமாக்கி அது சென்றடையும் இடத்தில் வேள்வியை நடத்துமாறு கூறி, அதை உருட்டி விட்டார். அவ்வளையம் கோமுகி ஆற்றங்கரையின் இவ்விடத்தில் விழுந்தது. அதனால் இவ்விடத்தில் சத்திர வேள்வியை 12 ஆண்டுகளாக நடத்தி நிறைவு செய்திருக்கிறோம்." 

" ஆஹா.‌அற்புதம்..  பிரம்ம தேவர் உருவாக்கிய அந்த தர்ப்பை சக்கரம் உருண்டதால், இவ்வனமும் நைமிசாரண்யம் ஆகியதா??" 

" ஆம். சரியாகச் சொன்னீர்கள். அதன் பெயரால்தான் நைமிச வனம் என்ற பெயரை அடைந்திருக்கிறது. "

[நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சுழன்ற ஆரண்யம் ‌என்பதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று]

" மிக நல்ல பணியை செய்து, இவ்வுலகைப் புனிதப்படுத்தி இருக்கிறீர்கள்.புண்ணியம் நல்கும் இந்த யாகத்தின் பலனை யாருக்கு வழங்கினீர்கள்? "

" அதனை உலகைக் காக்கும் ஸ்ரீஹரிக்கே வழங்கினோம். அவரும் யாகக் குண்டத்தில் தோன்றி எங்களின் அவிர்ப்பாகத்தை ஏற்று அருள் புரிந்தார்"

"ஆஹா... ஆஹா.. அற்புதம். ஸ்ரீ ஹரியின் தரிசனம் பெற்றவர்களைக் கண்டு நானும் பேரு பெற்றேன். இந்த இடத்தை அடைந்தது அடியேன் தன்யனானேன். " 

உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கோடு, வேள்வி நடந்த அவ்விடத்தை தொட்டு வணங்கிய உக்கிரசிரவர், அவர்களைப் வணங்கிப் பெருமிதத்துடன் பார்த்தார். 

" முனிவரே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் " என அங்கிருந்த முனிவரொருவர் உக்கிரசிரவரைப் பற்றியும், அவரது பயணத்தைப் பற்றியும் ஆர்வமாகக் கேட்டார்.

" எனது நாமம் உக்கிரசிரவன். வேதங்களை வகுத்த வியாசரின் சீடரான, வைசம்பாயனரின் மாணவன் நான். "

" அந்த மகா புருஷரின் சீடரா நீங்கள். உங்கள் தரிசனத்தால் பெருமகிழ்வடைகிறோம்.. நீங்கள் புராணங்களை எடுத்துரைக்கும் பௌராணிகர் தானே ??" 

அவரைக் கண்ட உள்ளத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்திய அந்த முனிவர், தனது சந்தேகத்தை அவரிடம் கேட்டார். 

"ஆமாம்.. உண்மைதான்... அப்பெரும் திருப்பணியைச் செய்வது அடியேனின் பாக்கியம் " என்றபடி தன் கைகளை கண்களில் ஒற்றி இறைவனை வணங்கினார் சௌதி. 

" இவ்வளவு நாட்கள் எங்கு சென்றிருந்தீர்கள். நீண்ட யாத்திரையில் இருந்து வருவது போல் இருக்கிறதே.. "

" வியாசர் உரைத்த பாரத காவியத்தை, தனஞ்செயன் வழி வந்த பரிக்ஷித்தின் மகனும், அஸ்தினாபுர அரசருமான ஜனமேஜயனுக்கு பாம்பு வேள்வியில் எனது குருவான வைசம்பாயனர் உரைத்தார். அந்தப் பவித்ரமான கதையைக் கேட்ட பிறகு,  யாத்திரை மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடினேன். பிறகு சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படும் குருசேத்ரபூமிக்கு சென்றேன். வீரப்புருஷர்கள் சொர்க்கம் எய்திய அப்பூமியைத் தரிசித்து விட்டு, அங்கிருந்து இந்த நைமிசாரண்யம் வந்தடைந்தேன் "

சௌதி தன்னுடைய புனித யாத்திரையைப் பற்றி எடுத்துரைக்க, சத்திர வேள்வியை நிறைவேற்றி பெரும் புண்ணியத்தைப் பெற்ற அந்த மாமுனிவர்கள், அவரை உயர்வாக போற்றி வணங்கினர்.

" சத்திர வேள்வி என்னும் பெரும் வேள்வியை முடித்திருந்தாலும், எவ்வித கர்வமுமின்றி பணிவுடன் இருக்கும்  உங்களுக்கு  அந்தப் புண்ணியக் கதைகளை நான் சொல்லட்டுமா" 

உக்கிரசிரவரின் இந்த கேள்வி, சௌனகர் தலைமையில் வேள்வியை முடித்து அமர்ந்திருந்த அந்த தவசிகளுக்கு வரம் கிடைத்தது போல் மகிழ்வை உண்டாக்கியது. அவர்களின் முகத்தில் பேரானந்தம் வெளிப்பட்டது.‌

"உங்கள் திருவாயால் அப்பெரும் புண்ணிய காவியத்தைக் கேட்பதற்கு, நாங்கள் பேறு பெற்றிருக்கிறோம். வைசம்பாயனரால் உங்களுக்குச் சொல்லப்பட்ட பாரத காவியத்தை முழுமையாக உங்களிடம் அப்படியே கேட்க விரும்புகிறோம் " 

அங்கிருந்த தவமுனிவர்களில் ஒருவர் எழுந்து, தனது உள்ளக்கிளர்வை வார்த்தைகளாய் எடுத்துரைக்க, மற்ற முனிவர்களும் அதனை ஆமோதித்து தலையசைத்தனர். அவர்களின் விருப்பத்தின்படி அந்த மகா காவியத்தை அவர்களுக்கு உரைக்கத் தொடங்கினார் சௌதி. 

_ தொடரும் 

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அகிலம் போற்றும் பாரதம் - மகாபாரதம்

அகிலம் போற்றும் பாரதம் ✍️ கவிஞர் விஜயநேத்ரன் அத்தியாயம் : 2 உலகம் தோன்றிய கதை

Copied!