Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அகிலம் போற்றும் பாரதம் - மகாபாரதம்

Copied!
Kavignar Vijayanethran

அகிலம் போற்றும் பாரதம் - மகாபாரதத் தொடர் 

பழம் பெரும் பாரத தேசத்தில் எண்ணற்ற இலக்கியங்களும், அது உணர்த்தும் வாழ்வியலும், காற்றைப் போல எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நால்வகை நிலைகளில் இலக்கியங்கள் வாழ்வியலை வகைப்படுத்தினாலும், கலாச்சாரம், பண்பாடு, பக்தி, ஆன்மீகம், அறநெறி, மனிதம் என்று எளிய முறையிலும் இரண்டறக் கலந்து  இயல்பாக நம்முடன் பயணிப்பதே அதன் சிறப்பம்சமாகும். அது நம் பார்வைக்குப் புலனாகாவிட்டாலும், உணர்வாக நம்முள் கலந்து நம்மை நன்னெறிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  வாழ்க்கையில் எல்லாவற்றையும் நம் வாழ்வில் அனுபவித்து தெரிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். சிலவற்றை பெரியோர்களின் அறிவுரைகளில் இருந்தும், மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்தும் கற்றுணர்ந்து, அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவார்ந்தோர் செயலாகும். அதைக் கடைப்பிடித்து நடப்பவர்கள் வாழ்வில் உயர்நிலையை அடைகிறார்கள்.

நாம் வாழ்க்கையில் சிறப்புடன் வாழ இருவழிகள் உண்டு. அதை முன்னோர்கள் நமக்கு வழங்கி சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம்தான் அதைக் கண்டு கொள்ளாமல் உதாசீனமாக நினைத்து மறந்து விட்டோம். வாழ்வில் எதிர்ப்படும் எல்லா மனிதர்களும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுக்காமல் மறைவதில்லை.  ஆனால் நமக்கு அதைக் கற்றுக் கொள்வதற்கும், உணர்ந்து செயல்படுவதற்கும் மனமோ, நேரமோ இருப்பதில்லை‌. 

நமக்கு முன்னாலோ, நம்முடனோ வாழும் மனிதர்களின் வாழ்வியலில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும். நல்லவற்றை எடுத்துக்கொண்டு, தீயவற்றை தவிர்க்க வேண்டும் என்பதே இலக்கியங்களும், உயர்ந்த படைப்புகளும் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், எதை நமது வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம்தான். அதனால் சிந்தித்து செயலாற்ற வேண்டியது நமது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும்.


எப்படி வாழ வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பது முதல் வகை. நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து, அதன் வழியே பயணத்து வாழ்வின் உயர்ந்த லட்சியங்களை அடைவதே அந்த வழிமுறையாகும். இதை  உன்னதமான மனிதர்களிடம் இருந்தும், அவர்களின் வாழ்வில் இருந்தும் படிப்பினையாகப் பெற்று, நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம்.

எப்படி வாழக்கூடாது, எதையொல்லாம் செய்யக்கூடாது என்பது இரண்டாவது வகை. இதில் நமக்கும், நம்மைச் சாரந்தோர்க்கும் கேடு தரும் தீயவற்றைத் தவிர்த்து, அதன் மூலம் நமது இலட்சியங்களை அடைவதாகும். தீய வழியில் சென்று, அதனால் அழிந்தவர்களின் வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடித்தவற்றை, நம் வாழ்க்கையில் தவிர்ப்பதே சரியான வழிமுறையாகும்.

" அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
." என்று சிலப்பதிகாரம் வாழ்வின் உண்மையை நமக்கு உணர்த்துகிறது.

இதுபோலவே இராமாயணமும், மகாபாரதமும் பக்தி இலக்கியங்களாக இருந்தாலும், நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதையும், தவிர்க்க வேண்டியவற்றையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. அதிலிருந்து நமக்குத் தேவையான நல்லவற்றை எடுத்துக் கொண்டால், நம் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பதற்கு அது பேருதவியாய் இருக்கும்.  

எல்லா இடங்களிலும் குறைகளும் நிறைகளும் கலந்துதான் இருக்கும். இருக்கும் குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிப் பார்த்தால், அதிலுள்ள நல்லவை நம் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும்.  

அப்படி உறவுகளின் உன்னதத்தைப் போற்றும் மகாபாரத காவியத்தை, என்னால் இயன்ற வகையில் எளிய முறையில் தொடர் நாவலாக எழுதும் முயற்சியைத் தொடங்கி உள்ளேன். அதை இயன்ற வரையில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசையில்  https://www.kavignarvijayanethran.com/ என்ற என்னுடைய வலைதளத்தில் அவ்வப்போது பதிவிடுகிறேன். அதை விருப்பம் உள்ளவர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.

மகாபாரதம் படிப்பதில் சிலருக்கு, அதன் பழமையான வடிவத்தில் வாசிப்பது சற்று கடினமாக உள்ளதாக கருதுகிறார்கள். அதனால் அதை சற்றும் குறையாமல் வாசிப்பதற்கு எளிதாக, ஒரு நாவலைப் போன்று எழுதினால் இன்னும் பலரைச் சென்றடையும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் " அகிலம் போற்றும் பாரதம்" என்ற தலைப்பில் மகாபாரத அடிச்சுவற்றினை எளிமைப்படுத்தி, தொடர் நாவலாக எழுதுகிறேன்.

நீண்ட தூரம் செல்லும் இந்த பயணத்தில், பாரதம் அறிந்த சான்றோர்கள் பிழையிருந்தால் மன்னித்து, அதனை எனக்குத் தெரிவித்தால் சரிசெய்ய வாய்ப்பளியுங்கள். உங்களுடைய   விமர்சனங்களை எனது கவிஞர் விஜயநேத்ரன் பக்கத்திலும் தெரிவிக்கலாம்..

உங்கள் அன்பினையும் ஆதரவையும் எதிர்நோக்கும்,
உங்கள்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அகிலம் போற்றும் பாரதம் அத்தியாயம் 1 : சத்திர வேள்வியும், நைமிசாரண்யமும்

Copied!