எங்களைப்பற்றி
கவிஞர் விஜயநேத்ரன்
என் அன்னைத் தமிழோடு அன்றாட உறவாடி,
அந்த அமுதத்தமிழ் தந்த நம்பிக்கையென்னும் சிறுபடகிலேறி,
என் தடைகளை உடைத்துக் கரைசேரப் பயணிக்கிறேன்.
என் கனவுகளைத் தேடி...
உடைபட்ட சிறகுகளுடன்,
அடைபட்ட கதவுகளுக்குள்,
சிறைபட்ட என் பொழுதுகளுக்கு, பெருந்துணையாய்த் தோள்கொடுத்தது என் சிந்தையில் உதித்த கற்பனைகள்...
அந்தக் கற்பனைகளைக் கருவாக்கி, நற்கவிதைகளாய் உருவாக்கி
என்னை நானே செதுக்கி, பக்குவப்படுத்திக் கொண்டு,
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.
அடுத்த பயணத்திற்கு...
பார்த்தும் கேட்டும் மகிழ்ந்த,
பாரதக் கதையதனைக் கவிதையாக்கினேன்...
சிறு சிறு பகுதிகளை மட்டும்..
நீங்கள் தந்த நம்பிக்கையில்,
மொத்தக் கதையினையும்,
நிச்சயம் ஒருநாள் முழுக்கவிதையாக்குவேன்..
காட்சிகளைக் கவிதையாக்கிய எனக்குள்,
கனவுகள் முளைக்கத் தொடங்கியது...
கவிதைகளைப் பாடலாக்கும் கற்பனை..
அந்தக் கற்பனைப் பறவைக்கு,
சிறகுகள் கொடுத்துப் பறக்க விட்டேன்...
என் மனவானில்..
அது தீட்டியது பல பாடல்களை,
எழுத்தாணி கொண்டு என்னுள்ளே...
தோள் கொடுத்த தோழர்களால்,
ஒலிஒளிவடிவம் பெற்றது என் வரிவடிவங்கள் சில..
வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறது பல..
வரிகளாகவே..
அது தந்த நம்பிக்கையில்,
அவர்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்..
வெள்ளித்திரையில் வலம்வரும் முயற்சியில்...
எனக்கான வாய்ப்புகளைத் தேடி...
என்றாவது வெல்வேனென்ற,
என் தன்னம்பிக்கையோடு...
உதிரம் சாராத உறவுகளை,
அந்த உறகளின் உணர்வுகளை,
அந்த உணர்வுகளை சுமக்கும் உள்ளங்களை,
அந்த உள்ளங்களின் காயங்களை,
அந்த காயங்களுக்கான மருந்தினை,
கதையின் மையமாக்கி,
வேள்விப்பூக்களாய் விளைவித்தேன்...
உங்கள் விமர்சனங்களால் நலம் பெற்றேன்...
அடுத்தடுத்த படைப்புகளை எழுதி வருகிறேன்...
உங்கள் வாசிப்புக்கு விருந்தளிக்க..
உங்கள்அன்பில்,
கவிஞர் விஜயநேத்ரன்